ஒகேனக்கல், மேட்டூருக்கு நீர்வரத்து குறைந்தது
ஒகேனக்கல், மேட்டூருக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.
சேலம்,
கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதைத் தொடர்ந்து இந்த அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடிக்கு மேல் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது.
இதன் காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்பட்டது. நீர்வரத்தை தமிழக–கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து அளவீடு செய்து வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது கர்நாடகாவில் மழை குறைந்து விட்டது. இதனால் அணைகளுக்கு தண்ணீர் வரத்தும் குறைந்ததால், அங்கிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டது.
இதனிடையே நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று நீர்வரத்து மேலும் குறைந்து காணப்பட்டது. அதன்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. தண்ணீர் வரத்து குறைந்துள்ள நிலையிலும் நேற்று பரிசல் சவாரி இயக்கம் தொடங்கப்படவில்லை. இதன் காரணமாக நேற்று 12–வது நாளாக பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று நீர்வரத்து வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடியாக குறைந்து உள்ளது. மேலும் அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று முன்தினம் 50.15 அடி உயரமாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று 51.11 அடியாக உயர்ந்துள்ளது. ஒகேனக்கல், மேட்டூருக்கு நீர்வரத்து குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.