லேப் டெக்னீஷியன் பணிக்கு லஞ்சம் வாங்கிய மருத்துவ அதிகாரிக்கு 4 ஆண்டு ஜெயில் நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு


லேப் டெக்னீஷியன் பணிக்கு லஞ்சம் வாங்கிய மருத்துவ அதிகாரிக்கு 4 ஆண்டு ஜெயில் நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 3 Aug 2019 10:15 PM GMT (Updated: 3 Aug 2019 4:36 PM GMT)

லேப் டெக்னீஷியன் பணிக்கு லஞ்சம் வாங்கிய மருத்துவ அதிகாரிக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் கடந்த 2009–ம் ஆண்டு காசநோய் தடுப்பு திட்ட துணை இயக்குனராக பணியாற்றி வந்தவர் செந்தில்வேல் முருகன் (வயது 65). இவரது சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் ஆகும். தற்போது நாகர்கோவில் கோணத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் பணியில் இருந்த போது லேப் டெக்னிஷியன் பணிக்கு லஞ்சம் வாங்கியதாக நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தன.

இந்த நிலையில் 9–9–2009 அன்று செந்தில்வேல் முருகன் நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் மூலமாக சென்னை சென்றார். அப்போது லஞ்சம் வாங்கிய பணத்தையும் அவர் எடுத்து செல்வதாக லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு, நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் செந்தில்வேல் முருகனை பிடிக்க சென்னை போலீசார் திட்டமிட்டனர்.

இதனையடுத்து கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் தாம்பரம் ரெயில் நிலையத்தை சென்றடைந்த போது, சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக ரெயிலில் ஏறி செந்தில்வேல் முருகனை சோதனை செய்தனர். அப்போது அவரிடம் ரூ.21 லட்சம் இருந்தது.

இந்த பணத்துக்கு கணக்கு காட்டுமாறு அவரிடம் போலீசார் கேட்டனர். ஆனால் அவரால் ரூ.19.35 லட்சத்துக்கு மட்டுமே கணக்கு தெரிவிக்க முடிந்தது. மீதமுள்ள பணத்துக்கு அவரால் கணக்கு தெரிவிக்க முடியவில்லை. அந்த பணத்தை லஞ்சமாக வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து செந்தில்வேல் முருகனை சென்னை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் பணி இடைநீக்கமும் செய்யப்பட்டார். இவர் லஞ்சம் வாங்கியது குமரி மாவட்டத்தில் என்பதால் இது தொடர்பான வழக்கு நாகர்கோவிலில் உள்ள முதன்மை குற்றவியல் கோர்ட்டில் நடந்தது. வழக்கை நீதிபதி அருணாசலம் விசாரணை நடத்தினார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

அப்போது குற்றம் சாட்டப்பட்ட செந்தில்வேல் முருகனுக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.4 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி அருணாசலம் தீர்ப்பு அளித்தார்.


Next Story