கடவுள் ஆசியால் 2 முறை முதல்-மந்திரி ஆகி உள்ளேன்: ‘அரசியலில் நீடிக்க நான் விரும்பவில்லை’ குமாரசாமி பரபரப்பு பேட்டி
கடவுள் ஆசியால் 2 முறை முதல்-மந்திரி ஆகி உள்ளேன் என்றும், அரசியலில் நீடிக்க நான் விரும்பவில்லை என்றும் குமாரசாமி கூறியுள்ளார்.
ஹாசன்,
கடவுள் ஆசியால் 2 முறை முதல்-மந்திரி ஆகி உள்ளேன் என்றும், அரசியலில் நீடிக்க நான் விரும்பவில்லை என்றும் குமாரசாமி கூறியுள்ளார்.
நல்லவர்களுக்கு மதிப்பு இல்லை
கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி அரசு நடந்து வந்தது. இந்த அரசு மீதான அதிருப்தி காரணமாக 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். இதனால் கூட்டணி அரசு கவிழ்ந்தது. தற்போது எடியூரப்பா தலைமையில் புதிதாக பா.ஜனதா அரசு அமைந்து உள்ளது.
இந்த நிலையில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி ஹாசனில் நேற்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கடவுள் ஆசியால் 2 முறை முதல்-மந்திரி ஆகி உள்ளேன். எதிர்பாராதவிதமாக தான் நான் 2 முறையும் முதல்- மந்திரியாக இருந்தேன். நல்லவர்களுக்கு அரசியலில் மதிப்பு இல்லை.
அரசியலில் நீடிக்க....
கர்நாடகத்தில் தற்போது சாதி அரசியல் நடக்கிறது. அதிகாரத்தை கைப்பற்ற நிறைய சதி நடக்கிறது. இந்த மாதிரி சூழ்நிலையில் அரசியலில் நீடிக்க நான் விரும்பவில்லை. அரசியலில் இருந்து பின்வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது. கர்நாடக அரசியலில் என்னன்னவோ நடக்கிறது. அதுபற்றி நான் பேசி எதுவும் ஆகபோவது இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
அரசியலில் நீடிக்க நான் விரும்பவில்லை என்று குமாரசாமி கூறி இருப்பது ஜனதா தளம்(எஸ்) கட்சி தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story