குளித்தலை அருகே தந்தை-மகன் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது


குளித்தலை அருகே தந்தை-மகன் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
x
தினத்தந்தி 4 Aug 2019 4:30 AM IST (Updated: 3 Aug 2019 11:09 PM IST)
t-max-icont-min-icon

குளித்தலை அருகே தந்தை-மகன் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

குளித்தலை,

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள முதலைபட்டியில் ஊராட்சிக்கு சொந்தமான ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பை அதிகாரிகளிடம் அடையாளம் காட்டியதாக, அப்பகுதியில் வசித்த வீரமலை, அவருடைய மகன் நல்லதம்பி ஆகியோர் கடந்த 29-ந்தேதி ஒரு கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக வீரமலையின் மகள் அன்னலெட்சுமி அளித்த புகாரின் பேரில், முதலைப்பட்டியைச் சேர்ந்த ஜெயகாந்தன் (வயது 23), சவுந்தர்ராஜன் என்ற பெருமாள் (35), சசிக்குமார் (33) உள்பட 6 பேர் மீது குளித்தலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக 6 பேர் மதுரை ஐகோர்ட்டில் சரண் அடைந்தனர். மேலும் போலீசாரால் தேடப்பட்டு வந்த பிரவீன் குமார் (23) என்பவர் திருச்சியில் உள்ள கோர்ட்டில் சரண் அடைந்தார். ஆனால் இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருத்தப்பட்ட ஜெயகாந்தன் தலைமறைவாக இருந்தார்.

இதற்கிடையில் இரட்டைக்கொலை வழக்கை துரிதமாக விசாரிக்காத காரணத்தால் குளித்தலை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் ஜெயகாந்தனை மதுரையில் கைதுசெய்ததாக கூறப்படுகிறது.

இதன்பின்னர் நேற்று குளித்தலை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஜெயகாந்தன் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கு குறித்து விசாரித்த நீதிபதி பாக்கியராஜ், ஜெயகாந்தனை நீதித்துறை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனைதொடர்ந்து ஜெயகாந்தன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இந்த கொலை வழக்கில் சரண் அடைந்தவர்களையும், கைதான ஜெயகந்தனையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. 

Next Story