கருணாநிதிக்கு 6 அடி இடம் கொடுக்க மறுத்த கயவர்களுக்கு பாடம் புகட்டுங்கள் இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு


கருணாநிதிக்கு 6 அடி இடம் கொடுக்க மறுத்த கயவர்களுக்கு பாடம் புகட்டுங்கள் இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 3 Aug 2019 11:15 PM GMT (Updated: 3 Aug 2019 5:47 PM GMT)

கருணாநிதிக்கு 6 அடி இடம் கொடுக்க மறுத்த கயவர்களுக்கு வேலூர் தேர்தல் வெற்றிமூலம் பாடம் புகட்டுங்கள் என்று வேலூரில் நடந்த இறுதிக்கட்ட பிரசாரத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

வேலூர், 

வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்தை ஆதரித்து வேலூர் மண்டித்தெருவில் நேற்று தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தி.மு.க. வேலூர் மத்திய மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ. வரவேற்றார்.

எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி., கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.காந்தி எம்.எல்.ஏ., மத்திய மாவட்ட அவைத்தலைவர் முகமதுசகி, மேற்கு மாவட்ட செயலாளர் முத்தமிழ்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டணி கட்சிகளை சேர்ந்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான வைகோ, கம்யூனிஸ்டு கட்சி மத்திய செயற்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், இந்திய கம்யூனிஸ்டுகட்சி மாநில செயலாளர் ரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம்லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

வேலூர் தொகுதி தேர்தல் பிரசாரத்தின் உச்சக்கட்டமாக இந்த கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தின்மூலம் வெற்றி உறுதியாக்கப்பட்டுள்ளது. எத்தனை லட்சம் வாக்குகள் வித்தியாசம் என்பதுதான் கேள்வியாக இருக்கிறது. இந்த தொகுதியில் தேர்தல் முடிந்திருக்க வேண்டும். நமது வெற்றியை தடுக்கவேண்டும் என்பதற்காக மத்திய அரசும், மாநில அரசும் கூட்டணி அமைத்து, தேர்தல் ஆணையத்தையும், வருமானவரித்துறையையும் வைத்துக்கொண்டு நாடகத்தை நடத்தி தேர்தலை தடுக்க சதித்திட்டம் தீட்டினர். அன்று நடக்க இருந்த தேர்தலை நீங்கள் தடுத்திருக்கலாம். ஆனால் 5-ந் தேதிக்கு பிறகு எங்கள் வெற்றியை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது.

பக்கத்து மாவட்டமான தருமபுரி, கிருஷ்ணகிரியில் கலைஞர் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர்திட்டம் வேலூர் மாவட்டத்துக்கும் விரிவுப்படுத்தப்பட்டு, திட்டத்துக்கு நானே அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தேன். 50 சதவீத பணிகள் முடிவடைந்திருந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதன்பிறகு 8 வருடங்களாக ஆட்சியில் இருப்பவர்கள் அந்த திட்டத்தை முழுமையாக நிறைவேற்றி இருந்தால் அனைவருக்கும் குடிநீர் கிடைத்திருக்கும். ஆனால் திட்டமிட்டு திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டார்கள்.

இங்கு போட்டியிடும் கதிர்ஆனந்த் வெற்றிபெற்று பொறுப்பேற்றதும் முதல் வேலையாக கூட்டுக்குடிநீர் திட்டத்தை அனைத்துப்பகுதிகளுக்கும் கொண்டுவந்து சேர்ப்பார். ஏற்கனவே டெல்லியில் 38 உறுப்பினர்களின் குரல் ஒலித்துக்கொண்டிருக்கிறது. அவர்களுடன் 39-வது குரலாக கதிர்ஆனந்த் குரல் ஒலிக்கவேண்டும்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆம்பூரில் நடந்த கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். இஸ்லாமிய மக்கள் தி.மு.க. பக்கம் இருப்பதால் அவர்களிடையே பிளவை ஏற்படுத்த இதை கூறியிருக்கிறார். அப்துல்கலாம் 2-வது முறையாக ஜனாதிபதியாக வர இருந்ததை கருணாநிதி தடுத்தார் என்றும், அவரை கசாப்புக்கடைக்காரர் என்று கூறியதாகவும் பேசியிருக்கிறார்.

அப்துல்கலாம் முதல் முறை ஜனாதிபதியாக அவரை ஆதரித்து குரல் கொடுத்தது கருணாநிதிதான். வேட்புமனு தாக்கலின்போது முதல் கையெழுத்து போட்டது முரசொலிமாறன்தான். ஆனால் 2-வது முறை போட்டியின்றி தேர்ந்தெடுத்தால் ஜனாதிபதியாக அப்துல்கலாம் தயாராக இருந்தார். ஆனால் அதற்கான சூழ்நிலை இல்லை. அதனால்தான் ஒருபெண்ணை ஜனாதிபதியாக்கலாம் என்று பிரதீபாபாட்டீலை கருணாநிதி அடையாளம் காட்டினார். ஆனால் கலைஞரை இழிவுப்படுத்துவதாக நினைத்து, அப்துல்கலாமை இழிவுப்படுத்தி இருக்கிறார். இதற்கு இஸ்லாமிய மக்களிடம், ஓ.பன்னீர்செல்வம் மன்னிப்பு கேட்கவேண்டும்.

கருணாநிதி கூறியதாக அவர் கூறியதை நிரூபித்தால் அவர் என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ள தயார். இல்லையென்றால் நாங்கள் கொடுக்கும் தண்டனையை ஏற்க தயாரா? என்று கேட்க கடமைப்பட்டுள்ளேன்.

கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது தமிழ்நாட்டில் நீட் தேர்வு நுழைய முடிந்ததா?, ஏன் ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது நுழைய முடிந்ததா?. இன்று என்ன நிலை. நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு சட்டமன்றத்தில் 2 முறை தீர்மானம் நிறைவேற்றி ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்து 2 வருடமாகியும் எந்தவித தகவலும் இல்லையே என்று நான் சட்டமன்றத்தில் கேட்டேன். அப்போதுதான் 2017-ம்ஆண்டே அதை திருப்பி அனுப்பிவிட்டதாக தெரிவித்தனர்.

திருப்பி அனுப்பியதை ஏன் சட்டமன்றத்தில் வைக்கவில்லை என்று ஐகோர்ட்டு கேட்டுள்ளது. மேலும் 8-ந் தேதிக்குள் அபிடவிட் தாக்கல் செய்யவும் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வில் தோல்வியால் இன்று கூட திருநெல்வேலியில் ஒரு மாணவி தற்கொலை செய்திருக்கிறார். இதை பற்றியெல்லாம் எடப்பாடி பழனிசாமிக்கு கவலை இல்லை. கொள்ளையடித்த பணத்தை பாதுகாக்க மத்திய அரசுக்கு அடிமையாக இருக்கிறார்.

நாங்கள் 5 முறை கலைஞர் முதல்-அமைச்சராக இருந்த காலத்தில் செய்த சாதனைகளை சொல்லி, மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கொண்டுவரும் திட்டங்களை சொல்லி வாக்கு கேட்கிறோம். ஆனால் 8 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் நீங்கள் ஏதாவது திட்டங்களை கூறி வாக்கு கேட்க தெம்பு இருக்கிறதா?. தமிழ்நாட்டில்தான் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக விருது கொடுத்திருக்கிறார்கள். சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கு பொள்ளாச்சி சம்பவம் போதாதா?. அதைபற்றி சிந்திக்க அருகதையில்லை.

5-ந் தேதி வாக்குப்பதிவு, 7-ந்தேதி நம்மையெல்லாம் உருவாக்கி நாட்டுக்கு அடையாளம் காட்டிய கலைஞரின் முதலாம் ஆண்டு நினைவுநாள். கலைஞர் உடலை அடக்கம் செய்வதற்கு இடம் கேட்டோம். கொடுக்கவில்லை. கோர்ட்டுக்கு சென்று வாதாடி நீதிபதி உத்தரவுக்கு பிறகு இடம் கிடைத்தது. கலைஞருக்கு 6 அடி இடம் இல்லையென்று சொன்ன கயவர்களுக்கு வேலூர் தொகுதி வெற்றி மூலம் பாடம் புகட்ட வேண்டும்.

அதற்கு கதிர்ஆனந்துக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அவரை அமோக வெற்றிபெறச்செய்யுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார். முடிவில் வேலூர் மத்திய மாவட்ட துணைசெயலாளர் காத்தவராயன் நன்றி கூறினார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு எம்.எல்.ஏ. உள்பட முன்னாள் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முன்னதாக வேட்பாளர் கதிர்ஆனந்த் வாக்குகள் கேட்டு பேசினார்.

Next Story