ஜோலார்பேட்டை அருகே அடுத்தடுத்து தடம் புரண்ட சரக்கு ரெயில் பெட்டிகள்
ஜோலார்பேட்டை அருகே அடுத்தடுத்து சரக்கு ரெயில் பெட்டிகள் தடம் புரண்டன.
ஜோலார்பேட்டை,
தமிழக, கேரள எல்லை பகுதியில் உள்ள மதுக்கரையில் இருந்து பஞ்சாப் மாநிலம் லூதியானாவுக்கு கோதுமை, பருப்பு உள்ளிட்ட தானியங்களை ஏற்றி வருவதற்காக 50 காலி பெட்டிகளுடன் நேற்று முன்தினம் சரக்கு ரெயில் புறப்பட்டது. அந்த ரெயில் நேற்று மதியம் 12.30 மணியளவில் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகில் பக்கிரிதக்கா ‘சி’ கேபின் அருகில் வந்து கொண்டிருந்த போது 20, 22, 32 ஆகிய 3 பெட்டிகள் திடீரென பயங்கர சத்தத்துடன் தண்டவாளத்தை விட்டு தடம் புரண்டன.
உடனடியாக டிரைவர் சுதாரித்து கொண்டு என்ஜினை நிறுத்தினார். அதன்பிறகு ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து சிறிதுநேரம் விட்டு விட்டு 4 முறை அபாய சங்கு ஒலிக்கப்பட்டது. இதனால் ரெயிலுக்காக காத்திருந்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் பதற்றமடைந்தனர்.
தகவல் அறிந்ததும் ரெயில்வே உதவி கோட்ட பொறியாளர் அபிஷேக்வர்மா, மேற்பார்வை பொறியாளர் சுரேஷ், நிலைய மேலாளர் சுந்தரமூர்த்தி மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் 33-வது பெட்டியில் இருந்து மற்ற பெட்டிகளை தனியாக பிரித்தனர். மேலும் அந்த 18 பெட்டிகளை வேறு என்ஜினுடன் பொருத்த முடிவு செய்தனர்.
அதன்படி மாற்று என்ஜின் வரவழைக்கப்பட்டு, அந்த என்ஜின் திருப்பத்தூர் நோக்கி சென்றது. பின்னர் அங்கிருந்து பின்நோக்கி நகர்ந்து வந்து, 33-வது பெட்டியில் இருந்து 50-வது பெட்டி வரை 18 பெட்டிகள் இணைக்கப்பட்டது. அதன்பிறகு அந்த 18 பெட்டிகளுடன் என்ஜின் மதியம் 1.45 மணியளவில் திருப்பத்தூர் நோக்கி புறப்பட்டது.
சிறிது தூரம் செல்வதற்குள் கேபின் அருகில் 43-வது பெட்டி திடீரென தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கி தடம் புரண்டது. மீண்டும் அங்கு சென்ற அதிகாரிகள், 44-வது பெட்டியில் இருந்து 50-வது பெட்டி வரை 7 பெட்டிகளை மட்டும் என்ஜினில் பொருத்தி திருப்பத்தூர் ரெயில் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
2-வதாக என்ஜின் தடம் புரண்ட இடம் சேலம் - சென்னை மார்க்கமாக செல்லும் பயணிகள் ரெயில் செல்லும் தடமாகும். இதையடுத்து சென்னை கூடுதல் கோட்ட ரெயில்வே மேலாளர் இளங்கோ தலைமையில் 150-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் விரைந்து வந்து பயணிகள் ரெயில் செல்லும் பகுதியில் தடம் புரண்ட பெட்டிகளை அகற்றும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். அதை தொடர்ந்து மாலை 6.40 மணிக்கு தடம் சீரமைக்கப்பட்டு அந்த வழியாக ரெயில்கள் இயக்கப்பட்டன.
இதனால் ஆலப்புழையில் இருந்து சென்னை செல்லும் ஆலப்புழை எக்ஸ்பிரஸ்
, கோவையில் இருந்து சென்னை செல்லும் கோவை எக்ஸ்பிரஸ், கோவையில் இருந்து சென்னை செல்லும் தன்பாத் எக்ஸ்பிரஸ் ஆகிய 3 ரெயில்கள் திருப்பத்தூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன. பணிகள் சீரடைந்ததும் 1 மணி நேரம் தாமதமாக 3 ரெயில்களும் ஒன்றன் பின் ஒன்றாக இயக்கப்பட்டன.
தண்டவாள பராமரிப்பு சரிவர இல்லாத காரணத்தினால் தான், அடுத்தடுத்து 2 முறை பெட்டிகள் தடம் புரண்டிருக்கிறது என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
Related Tags :
Next Story