நிதிநிறுவன அதிபரை கடத்திய வழக்கு: 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
நிதி நிறுவன அதிபரை கடத்திய வழக்கில் தொடர்புடைய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
தலைவாசல்,
தலைவாசல் அருகே உள்ள மும்முடி பகுதியை சேர்ந்தவர் மணி(வயது 57). நிதிநிறுவன அதிபரான இவரை கடந்த ஜூன் மாதம் மர்ம கும்பல் காரில் கடத்தி சென்றது. இதுதொடர்பாக தலைவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அந்த கும்பல் ரூ.1 கோடி கேட்டு மணியின் உறவினர்களை மிரட்டியது.
இதனிடையே போலீசார் தீவிரமாக தேடுவதை அறிந்த அந்த கும்பல் மணியை திண்டுக்கல் பஸ்நிலையம் பகுதியில் விட்டுவிட்டு சென்றது. இதையடுத்து போலீசார் அவரை மீட்டு விசாரணை நடத்தினர். மேலும் இந்த கடத்தல் தொடர்பாக தலைவாசல் அருகே உள்ள தியாகனூர் புதூரை சேர்ந்த தன்ராஜ்(57), சார்வாய்புதூரை சேர்ந்த சக்திவேல்(34) உள்பட சிலரை போலீசார் கைது செய்தனர்.
போலீஸ் விசாரணையில் தன்ராஜ், சக்திவேல் மீது திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் சில போலீஸ் நிலையங்களில் பதிவாகி இருந்தது தெரியவந்தது.
பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர், தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல் பாண்டியன் ஆகியோர் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். இதை பரிசீலித்து தன்ராஜ், சக்திவேல் ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ராமன் உத்தரவிட்டார். இதற்கான ஆணை சேலம் மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story