ராசிபுரம் அருகே வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்தவர் கைது
ராசிபுரம் அருகே வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
ராசிபுரம்,
ராசிபுரம் தாலுகா, நாமகிரிப்பேட்டை அருகே உள்ள பிலிப்பாக்குட்டை கணவாய்பட்டி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் இஸ்மாயில். இவருடைய மகன் முஸ்தபா (வயது 29). இவர் அதே பகுதியில் பஞ்சர் கடை வைத்து குடும்பத்துடன் வசித்து வருகிறார். முஸ்தபா வெளிநாட்டில் வேலை செய்ய விரும்பினார்.
அதற்காக அவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் பிலிப்பாக்குட்டையைச் சேர்ந்த அவரது நண்பர் மணி என்பவரிடம் உதவி கேட்டுள்ளார். அதற்கு மணி அளித்த தகவலின் பேரில் கடலூர் மாவட்டம், வேப்பூர் காலியாமேடு வடக்கு தெருவைச் சேர்ந்த வேல்முருகன் (42) என்பவரை போன் மூலம் முஸ்தபா தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
இதையொட்டி முஸ்தபாவை நேரில் சந்தித்த வேல்முருகன் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு ரூ.90 ஆயிரம் ஆகும் என்றும், முதலில் ரூ.45 ஆயிரம் தரும்படியும், மீதி ரூ.45 ஆயிரத்தை வேலைக்கு சேர்ந்தவுடன் கொடுக்கும்படியும் கூறியுள்ளார். இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் இருதவணைகளாக இன்டர்நெட் சென்டர் மூலம் ஆன்-லைனில் முஸ்தபா, வேல்முருகனின் வங்கி கணக்குகளுக்கு ரூ.39 ஆயிரத்து 600 அனுப்பி உள்ளார்.
ஆனால் வேலை வாங்கி தராமலும், பணத்தை திருப்பி தராமலும் வேல்முருகன் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஆயில்பட்டி போலீசில் முஸ்தபா புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திலகவதி, வழக்குப்பதிவு செய்து வேல்முருகனை கைது செய்தார்.
Related Tags :
Next Story