மாவட்ட செய்திகள்

ஆடிப்பெருக்கையொட்டி காவிரி ஆற்றில் பெண்கள் வழிபாடு + "||" + Atipperukkaiyotti Worship of women in the Cauvery River

ஆடிப்பெருக்கையொட்டி காவிரி ஆற்றில் பெண்கள் வழிபாடு

ஆடிப்பெருக்கையொட்டி காவிரி ஆற்றில் பெண்கள் வழிபாடு
ஆடிப்பெருக்கையொட்டி காவிரி ஆற்றில் ஏராளமான பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
குளித்தலை,

தமிழகத்தில் பாயும் புண்ணிய நதியான காவிரி ஆற்றில் ஆடி பதினெட்டு அன்று ஆற்றங்கரையில் ஆடிப் பெருக்கு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. காசிக்கு நிகராக போற்றப்படும் குளித்தலை கடம்பவனேசுவரர் கோவிலின் எதிரே உள்ள கடம்பந்துறை காவிரி ஆற்றில் பெண்கள் மற்றும் புதுமண தம்பதிகள் தங்கள் குடும்பத்தினருடன் வந்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.


இதேபோல் பெண்கள் குழுவாக பிரிந்து தங்களுக்கென ஒரு இடத்தை பிடித்துகொண்டு அந்த இடத்தை சுத்தம் செய்து காவிரி பெருகிவர காரணமான விநாயகரை வழிபடும் வகையில் மணலால் பிள்ளையார் பிடித்து வைத்தனர். பின்னர் வாழை இலையை விரித்து அதில் வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், தேங்காய், மஞ்சள், குங்குமம், காதோலை, கருகமணி, காப்பரிசி, விளாங்கனி, நாவல்பழம், பூக்கள், பல்வேறு பழவகைகளை வைத்து பூஜைகள் நடத்தினர்.

முளைப்பாரி

அதைத்தொடர்ந்து அனைத்து பெண்களும் தங்கள் கழுத்திலும், ஆண்கள் கைகளிலும் மஞ்சள் கயிறு கட்டிக்கொண்டனர். புதுமண தம்பதியர் மஞ்சள் கயிறு மாற்றிக்கொண்டனர். பூஜைகள் முடித்தபின்னர் மணலால் செய்யப்பட்ட விநாயகர், அவருக்கு படைக்கப்பட்ட காதோலை கருகமணி, எலுமிச்சம்பழம் உள்ளிட்ட பொருட்களை இலையில் வைத்து ஆரத்தி எடுத்து காவிரி ஆற்றில்விட்டு வழிபட்டனர். புதுமண தம்பதிகள் திருமணத்தின்போது தாங்கள் அணிந்திருந்த மாலைகளை காவிரி ஆற்றில் விட்டு வழிபட்டனர். காவிரி ஆற்றால் வளம் செழிக்கவேண்டுமென விவசாயிகள் காவிரியை வணங்கி வழிபட்டனர். சிலர் முளைப்பாரி எடுத்துவந்து காவிரிக்கரையில் வைத்து பூஜைகள் செய்து ஆற்றில் விட்டு வழிபட்டனர்.

ஆடிப்பெருக்கையொட்டி குளித்தலை மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் இருந்து வந்த திரளான பெண்கள், புதுமண தம்பதிகள் மற்றும் பொதுமக்கள் கடம்பந்துறை காவிரி ஆற்றில் பூஜைகள் செய்து காவிரித்தாயை வழிபட்டனர். பின்னர் கடம்பவனேசுவரர் கோவிலுக்கு சென்று சிவபெருமானை வழிபட்டனர்.

தீர்த்தவாரி

குளித்தலை பகுதியில் காவிரி ஆற்றங்கரை பகுதியில் தண்ணீர் செல்லாத காரணத்தால், ஆற்றின் கரையில் இருந்து நீண்ட தூரம் ஆற்று மணலில் பொதுமக்கள் நடந்து சென்று சிறிதளவாக ஓடும் தண்ணீரில் பூஜைகள் செய்தனர். இதேபோல் ஆடிப்பெருக்கையொட்டி அய்யர்மலை ரெத்தினகிரீஸ்சுவரர் கோவிலில் இருந்து அஷ்டரதேவர் கடம்பந்துறை காவிரி ஆற்றுக்கு கொண்டுவரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பின்னர் தீர்த்தவாரி நடைபெற்றது. பலர் இதில் கலந்துகொண்டு புனித நீராடினார்கள்.

தவுட்டுப்பாளையம் காவிரிஆறு

தவுட்டுப்பாளையத்தில் உள்ள காவிரி ஆற்றில் ஆடிப்பெருக்கையொட்டி ஏராளமானோர் சிறப்பு வழிபாடு நடத்தினர். புதுமண தம்பதிகள், பெண்கள் புனித நீராடினர். மணல் பிள்ளையார், மஞ்சள் பிள்ளையார் வைத்து சர்க்கரையுடன் கலந்த பச்சரிசி மஞ்சள் நூல், முளைப்பாரி வைத்து தரிசனம் செய்தனர். இதேபோல் குலதெய்வ கோவில்களில் உள்ள பழைய ஆயுதங்களை காவிரி ஆற்றுக்கு கொண்டு வந்து ஆயுதங்களை சுத்தம் செய்து ஆயுதங்களுக்கு விபூதி மற்றும் சந்தனம், குங்குமம் வைத்து தாரை தப்பட்டைகள் முழங்க குலதெய்வங்களை வழிபட்டனர். அதே போல் நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, கோம்புப்பாளையம் உள்ளிட்ட காவிரி கரையோர ஊர்களிலும் ஆடிப்பெருக்கையொட்டி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதேபோல் லாலாபேட்டை காவிரி ஆற்றிலும் ஏராளமானோர் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

கிருஷ்ணராயபுரம்

ஆடிப்பெருக்கையொட்டி கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள மாயனூர் செல்லாண்டி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. முன்னதாக ஏராளமான பக்தர்கள் காவிரி ஆற்றில் புனிதநீராடி அம்மனை வழிபட்டனர். முளைப்பாரி எடுத்து வந்த பக்தர்கள் காவிரி ஆற்றில் முளைப்பாரியை கரைத்தனர். மேலும் பெண்கள் காவிரி ஆற்றில் படையலிட்டு வழிபாடு நடத்தினர்.