சரக்கு வேன் மரத்தில் மோதி விபத்து: முன்னாள் ராணுவ வீரர் சாவு


சரக்கு வேன் மரத்தில் மோதி விபத்து: முன்னாள் ராணுவ வீரர் சாவு
x
தினத்தந்தி 4 Aug 2019 3:45 AM IST (Updated: 4 Aug 2019 1:22 AM IST)
t-max-icont-min-icon

சரக்கு வேன் மரத்தில் மோதிய விபத்தில், முன்னாள் ராணுவ வீரர் பலியானார்.

லாலாபேட்டை,

லாலாபேட்டையை சேர்ந்தவர் நாகேந்திரன் (வயது 50), இவர் கார்கில் ராணுவ வீரராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது மகள் அம்முவிற்கு திருமணமாகி குழந்தை இல்லாததால், நேற்று முன்தினம் ஆடி 3-வது வெள்ளிக்கிழமையொட்டி குடும்பத்தினருடன் லாலாபேட்டை அருகே உள்ள லெட்சுமணப்பட்டி பாம்பலாயி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட குடும்பத்தினர், உறவினர்கள் 13 பேருடன் சரக்கு வேனில் சென்றனர்.

வேனை அதேபகுதியை சேர்ந்த கண்ணன் (55) என்பவர் ஓட்டினார். சரக்கு வேன் பழைய ஜெயங்கொண்டம் அருகே உள்ள கே.புதுப்பட்டி என்ற இடத்தில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் வேனில் இருந்த நாகேந்திரன், டிரைவர் கண்ணன் உள்பட 13 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் லாலாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயம் அடைந்த 13 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் பலத்த காயமடைந்த நாகேந்திரன் மட்டும் மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைகப்பட்டார். அங்கு இரவில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story