பலத்த காற்றில் நாட்டுப்படகுகள் சேதம்


பலத்த காற்றில் நாட்டுப்படகுகள் சேதம்
x
தினத்தந்தி 4 Aug 2019 4:30 AM IST (Updated: 4 Aug 2019 1:57 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் பகுதியில் பலத்த காற்றில் நாட்டுப்படகுகள் சேதம் அடைந்தன.

கீழக்கரை,

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த காற்று வீசி வருகிறது. இந்த காற்றின் காரணமாக கடல் பகுதி கொந்தளிப்பாக காணப்படுகிறது. கடலில் ராட்சத அலைகள் எழுவதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பாம்பன் பாலத்தில் 60 கிலோ மீட்டருக்கும் அதிகமாக காற்று வீசியதால் ராமேசுவரம்-மதுரை மற்றும் ராமேசுவரம்-சென்னை ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் அந்த ரெயிலில் பயணம் செய்வதற்காக முன்பதிவு செய்திருந்த பயணிகள் பெரும் அவதிஅடைந்தனர்.

பலத்த காற்றின் காரணமாக கீழக்கரை பகுதியைச் சேர்ந்த விசைப்படகுகள் பாதுகாப்பு கருதி ஏர்வாடி கடல் பகுதியில் ஆழமான பகுதியில் நிறுத்தப்பட்டன. துறைமுக பகுதியில் நாட்டுப்படகுகள், வல்லங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. பலத்த காற்று மற்றும் ராட்சத அலையின் காரணமாக கரையை விட்டு இழுத்துச் செல்லப்பட்ட நாட்டுப்படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதமடைந்தன. இவ்வாறு 6-க்கும் மேற்பட்ட படகுகள் உடைந்து நொறுங்கின. ஒரு படகு முற்றிலுமாக உடைந்து கடலில் மூழ்கியது.

இது குறித்து மீனவர்கள், மீன்துறை அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளனர். பலத்த காற்று தொடர்ந்து வீசி வருவதால் மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டு வருகிறது.

பலத்த காற்றின் காரணமாக ராமநாதபுரம் நகர் பகுதியில் காற்றுடன் புழுதி தூற்றுவதால் இருசக்கர வாகன ஓட்டுனர்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். காற்றினால் விளம்பர போர்டுகள், மேற்கூரைகள் பறக்கின்றன. பல இடங்களின் மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி மின் தடை ஏற்பட்டது.

Next Story