மூலைக்கரைப்பட்டியில் குளத்தை தூர்வாரிய அரசு பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் பாராட்டு
மூலைக்கரைப்பட்டி தான்தோன்றி குளத்தை தங்கள் சொந்த செலவில் தூர்வாரிய அரசு பள்ளி மாணவ-மாணவிகளை பொதுமக்கள் பாராட்டினர்.
இட்டமொழி,
மூலைக்கரைப்பட்டி தான்தோன்றி குளத்தை தங்கள் சொந்த செலவில் தூர்வாரிய அரசு பள்ளி மாணவ-மாணவிகளை பொதுமக்கள் பாராட்டினர்.
பள்ளி மாணவ-மாணவிகள்
நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அரசனார்குளத்தில் தான்தோன்றி குளம் உள்ளது. இந்த குளத்தின் மூலம் ஏராளமான விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த நிலையில் அந்த குளம் நீண்ட நாட்களாக தூர்வாரப்படாமல் கிடந்தது. இதற்கிடையே அந்த பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் 250 மாணவ-மாணவிகள் இந்த குளத்தை தூர்வார முடிவு செய்தனர்.
குளத்தை தூர்வாரினர்
தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியை அகஸ்தினா ஜெபராணி அனுமதியுடன், தமிழ் ஆசிரியை சாரதா, சாரண ஆசிரியை இசபெல்லா செல்லக்குமாரி, உடற்கல்வி ஆசிரியர் முருகன் ஆகியோரின் ஏற்பாட்டில் மாணவ-மாணவிகள் அனைவரும் தினமும் தலா ரூ.2 வீதம், ஒரு மாதம் கொடுத்து வந்தனர். பின்னர் அதில் சேர்ந்த பணத்தை வைத்து, குளத்தை தூர்வார முடிவு செய்தனர்.
அதன்படி பொக்லைன் எந்திரம் மூலம் குளத்தை தூர்வாரும் பணி நடைபெற்றது. குளத்திற்குள் கிடந்த மண்ணை அள்ளி கரையில் போட்டு கரை பலப்படுத்தப்பட்டது. மாணவ-மாணவிகள் குளம் மற்றும் குளக்கரைகளில் கிடந்த பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள், குப்பைகளை அகற்றினர். அங்கிருந்த கருவேல மரங்களையும் வெட்டி அப்புறப்படுத்தினர்.
பொதுமக்கள் பாராட்டு
இதுகுறித்து தமிழ் ஆசிரியை சாரதா கூறுகையில், “மாணவ-மாணவிகள் குளத்தை தூர்வார வேண்டும் என்று முடிவு எடுத்து எங்களிடம் கூறினார்கள். உடனே தலைமை ஆசிரியர் இதற்கு அனுமதி அளித்தார். மேலும் மாணவர்களுக்கு நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும். விவசாயத்தை பேண வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மாணவ-மாணவிகள் தங்கள் பங்களிப்பை அளித்தார்கள். இதுபோல் ஒவ்வொரு பள்ளிகளிலும் விழிப்புணர்வை மாணவ-மாணவிகளுக்கு ஏற்படுத்த வேண்டும்“ என்றார். ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகளின் இந்த செயலை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.
Related Tags :
Next Story