கூடலூரில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து கேரள வாலிபர் பலி 2 பேர் படுகாயம்
கூடலூரில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து கேரள வாலிபர் பலியானார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
கூடலூர்,
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் தாலுகாவிற்கு உட்பட்ட கருவாரக்குன்டு பகுதியை சேர்ந்தவர் அகமது கோயாதங்கல். இவரது மகன் அக்ரம் முகமது சையது(வயது 33). இவரும், அதே பகுதியை சேர்ந்த மொய்தீன் மகன் சமீர்(33) மற்றும் கோவிந்தன் மகன் திபு(30) ஆகியோரும் நண்பர்கள் ஆவர். நேற்று முன்தினம் இரவு அக்ரம் முகமது சையது உள்பட 3 பேரும் ஊட்டிக்கு காரில் சுற்றுலாவுக்காக புறப்பட்டனர். காரை அக்ரம் முகமது சையது ஓட்டினார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணிக்கு கூடலூர்- ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேல்கூடலூர் பள்ளிவாசல் முன்பு செல்லும் வளைவான பகுதியில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் உள்ள சுமார் 15 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது. அது குடியிருப்பு பகுதி ஆகும். உடனே காரில் இருந்தவர்கள் பலத்த காயங்கள் ஏற்பட்டு வலியால் அலறினர். பின்னர் வீடுகளில் தூங்கி கொண்டிருந்தவர்கள் எழுந்து அங்கு ஓடி வந்தனர்.
இதைத்தொடர்ந்து காருக்குள் படுகாயங்களுடன் சிக்கி இருந்த அக்ரம் முகமது சையது, சமீர், திபு ஆகிய 3 பேரை பொதுமக்கள் மீட்டனர். இதற்கிடையில் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்துக்கு கூடலூர் போலீசார் விரைந்து வந்தனர். தொடர்ந்து படுகாயம் அடைந்தவர்கள் கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அக்ரம் முகமது சையது சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. மேலும் படுகாயம் அடைந்த சமீர், திபு ஆகிய 2 பேரும் மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கூடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story