கோவில் தெப்பக்குளக்கரைகளில் ஆடிப்பெருக்கு விழா வழிபாடு பெண்கள் புதுமஞ்சள் கயிறுகளை கட்டிக் கொண்டனர்


கோவில் தெப்பக்குளக்கரைகளில்  ஆடிப்பெருக்கு விழா வழிபாடு பெண்கள் புதுமஞ்சள் கயிறுகளை கட்டிக் கொண்டனர்
x
தினத்தந்தி 4 Aug 2019 4:24 AM IST (Updated: 4 Aug 2019 4:24 AM IST)
t-max-icont-min-icon

சென்னை மாநகரில் உள்ள கோவில் தெப்பக்குளக்கரைகளில் ஆடிப்பெருக்கு விழா வழிபாடுகள் கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பெண்கள் தங்களுக்கு புதுமஞ்சள் கயிறுகளை ஒருவருக்கொருவர் கட்டிக்கொண்டனர்.

சென்னை,

ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 18-ந்தேதி நீர்நிலைகளில் பெருக்கெடுத்து வரும் நீரை வரவேற்கும் விதமாக ஆடிப்பெருக்கு விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக காவிரி, தாமிரபரணி, வைகை, பவானி கூடுதுறை உள்ளிட்ட ஜீவநதிக்கரைகளில் பெண்கள் திரளாக கூடி விழாவை நடத்துகின்றனர். ‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்ற பழமொழிக்கு ஏற்பவும், ஆடிப்பெருக்கு நாளில் தொடங்கும் செயல்கள் இனிதே நிறைவேறும் என்பதால் விவசாயிகள் அடுத்த போகத்திற்கான விளைச்சலை தொடங்குவதற்கு முன் நீர் நிலைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த விழா கொண்டாடப்படுகிறது.

அத்துடன், சுமங்கலி பெண்கள் தாலிக் கயிறுகளை மாற்றிக் கொண்டு, தாங்கள் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என்பதற்காக நீர்நிலைகளில் மஞ்சள்கயிறு கட்டி வேண்டிக் கொள்கின்றனர். இதேபோல, கன்னிப் பெண்களுக்கு நல்ல வரன் அமைய வேண்டும் எனவும் பெண்கள் அரிசியை இறைவனுக்கு படைத்து வழிபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் சென்னை மாநகரில் உள்ள மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், வடபழனி முருகன் கோவில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர்கோவில், திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவில் உள்ளிட்ட கோவில் தெப்பக்குளக்கரைகளில் நேற்று காலை முதல் பெண்கள் திரளாக கூடி ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடினார்கள்.

தெப்பக்குளக்கரைகளில் வாழை இலை மீது பிள்ளையார் பிடித்து வைத்து, கருகுமணி, வளையல், காப்பரிசி, கண்ணாடி, பழவகைகள் உள்ளிட்டவற்றை வைத்து சிறப்பு வழிபாடுகள் செய்தனர். தெப்பக்குளத்துக்கு ஆரத்தி காண்பித்து வழிப்பட்டனர். தொடர்ந்து வீடுகளில் உள்ள மூத்த சுமங்கலி பெண்கள் வீட்டில் உள்ள பெண்களுக்கு புதுமஞ்சள் கயிறுகளை கழுத்தில் கட்டி ஆசிர்வாதம் செய்தனர். அதேபோல் புதுமண தம்பதிகளும் வழிபாடு செய்து புதிய தாலிகயிறு மாற்றிக் கொண்டனர். வீடுகளில் உள்ள ஆண்களுக்கு கைகளில் மஞ்சள் கயிறுகளும் கட்டிவிட்டனர். வீடுகளில் இருந்து கொண்டு வந்திருந்த புளியோதரை, சாம்பார், எலுமிச்சை, தயிர் சாதங்களை உண்டு மகிழ்ந்தனர். கோலாகலமாக இந்த விழா நடந்தது. இருந்தாலும், மாநகரில் உள்ள ஒரு சில கோவில் தெப்பக்குளங்களில் தண்ணீர் இல்லாததால் வீடுகளில் இருந்து கேன்களில் பொதுமக்கள் தண்ணீர் கொண்டு வந்து விழாவை நடத்தினர்.

மயிலாப்பூரை சேர்ந்த அகிலாண்டேஸ்வரி என்பவர் கூறும் போது, ‘ஒவ்வொரு ஆண்டும் ஆடி 18 அன்று நீர்நிலைகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காக இந்த விழாவை கொண்டாடி வருகிறோம். அதற்காக மயிலாப்பூர் கோவில் தெப்பக்குளத்தில் குடும்பத்துடன் வந்து பூஜைகளை செய்கிறோம். அத்துடன் சுமங்கலிகளுக்கு மஞ்சள் கயிறு கட்டி ஆசிர்வதிக்கிறோம். அத்துடன், நல்ல மழை பெய்து நாடு செழிக்க வேண்டும் என்று வேண்டி கொண்டோம்’ என்றார்.

மயிலாப்பூர் கபாலீசுவரர் சுவாமி மற்றும் வளையல் அலங்காரத்தில் கற்பகம்பாள் தெப்பக்குளத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து சுவாமி, அம்பாள் வீதி உலா வந்தனர். அதேபோல் மயிலாப்பூர் முண்டககண்ணியம்மன் கோவிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் முளைப்பாரியை ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனை வழிப்பட்டனர். தொடர்ந்து ஆண்டாள் அவதரித்த ‘ஆடிப்பூரம்’ விழா இன்று(ஞாயிற்றுக்கிழமை) இங்கு வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

Next Story