கடலூரில் ஆற்காடு லுத்தரன் திருச்சபையின் புதிய பேராயர் தேர்தல்


கடலூரில் ஆற்காடு லுத்தரன் திருச்சபையின் புதிய பேராயர் தேர்தல்
x
தினத்தந்தி 4 Aug 2019 4:35 AM IST (Updated: 4 Aug 2019 4:35 AM IST)
t-max-icont-min-icon

ஆற்காடு லுத்தரன் திருச்சபையின் புதிய பேராயர் தேர்தல் கடலூரில் நேற்று நடைபெற்றது.

கடலூர்,

கடலூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஆற்காடு லுத்தரன் திருச்சபைக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் பல திருச்சபைகள் உள்ளன. இத்திருச்சபையின் பேராயர் மற்றும் தலைவராக மாமறை ராஜாசாக்ரடீஸ் உள்ளார்.

அவரது பதவி காலம் முடிவடைந்ததால் புதிய பேராய, துணைத்தலைவர் மற்றும் 29 உறுப்பினர்களை கொண்ட ஆளுங்குழுவை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடலூர் ஆற்காடு லுத்தரன் திருச்சைபயில் நேற்று நடந்தது. இத்தேர்தலில் பேராயர் பதவிக்கு தற்போதைய பேராயர் ராஜா சாக்ரடீசும், போதகர் சாமுவேல் கென்னடியும், துணைத்தலைவர் பதவிக்கு போதகர் ஜான்சன் அசோக்குமாரும், போதகர் கிருபா ரட்சண்ய விஜயனும் போட்டியிட்டனர். இதுதவிர ஆளுங்குழு உறுப்பினர் பதவிக்கு இரு அணிகள் சார்பில் தலா 29 பேர் போட்டியிட்டனர்.

இத்தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு கடலூர் ஆற்காடு லுத்தரன் திருச்சபையில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இதற்காக ஆற்காடு லுத்தரன் திருச்சபையில் ஓட்டுப்பெட்டிகள் வைக்கப்பட்டு இருந்தன. இத்தேர்தலில் கடலூர், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து வந்திருந்த ஆற்காடு லுத்தரன் திருச்சபையை சேர்ந்த பாஸ்டரேட் கமிட்டி உறுப்பினர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். நேற்று மாலை 4 மணியுடன் ஓட்டுப்பதிவு முடிவடைந்தது. இதில் மொத்தமுள்ள 995 ஓட்டுகளில் 952 ஓட்டுகள் பதிவானது. இதன்பிறகு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. இத்தேர்தலையொட்டி ஏ.எல்.சி.திருச்பை வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


Next Story