விருத்தாசலம் அருகே இருபிரிவினரிடையே மோதல்; சாலை மறியல்


விருத்தாசலம் அருகே இருபிரிவினரிடையே மோதல்; சாலை மறியல்
x
தினத்தந்தி 4 Aug 2019 4:49 AM IST (Updated: 4 Aug 2019 4:49 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் அருகே இருபிரிவினரிடையே மோதல் ஏற்பட்டதால் சாலை மறியல் போராட்டம் நடந்தது. ஒரு தரப்பினரை போலீசார் விரட்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விருத்தாசலம்,

விருத்தாசலம் அருகே உள்ள எம்.பட்டி காலனியை சேர்ந்தவர் அஜித். இவரது, உறவினர் பெண்ணும் மோட்டார் சைக்கிளில் நேற்று விருத்தாசலத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது எம்.பட்டி கிராமத்தை சேர்ந்த சிலர், இருவரையும் ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் அஜித்தின் ஆதரவாளரான அன்னக்கிளி(வயது 38) உள்பட சிலர் காயமடைந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த காலனி மக்கள் ஒன்று திரண்டு மாலை 6 மணி அளவில் விருத்தாசலம்-சிறுவம்பார் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் விருத்தாசலம் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது காலனி மக்கள், தங்களை தாக்கியவர்களை கைது செய்தால்தான் மறியலை கைவிடுவோம் என்றனர்.

அப்போது சிலர் மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்கப்போவதாக மிரட்டல் விடுத்தனர். உடனே போலீசார் அவர்களிடம் இருந்து மண்எண்ணெய் கேனை பறிமுதல் செய்ததோடு, அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினார்கள். அந்த சமயத்தில் அங்கு வந்த கிராமத்தை சேர்ந்த 25 வயது வயதுடைய வாலிபர், சாலை மறியலில் ஈடுபட்டவர்களை திட்டியதாக தெரிகிறது. உடனே அந்த வாலிபரை போலீசார் பிடித்து, மங்கலம்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். இதனை தொடர்ந்து அங்கு வேடிக்கை பார்க்க திரண்டிருந்த கிராம மக்களையும் போலீசார் விரட்டியடித்தனர்.

இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், தாசில்தார் கவியரசு மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து காயமடைந்த அன்னக்கிளி உள்பட சிலரை சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள், தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து இரவு 8.30 மணிக்கு மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் 2½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனிடையே போலீசார் பிடித்துச்சென்ற வாலிபரை உடனடியாக விடுவிக்கக்கோரி பா.ம.க. ஒன்றிய செயலாளர் ஆசைத்தம்பி தலைமையில் எம்.பட்டி கிராம மக்கள் ஒன்று திரண்டு விருத்தாசலம்-சிறுவம்பார் சாலையில் மறியலில் ஈடுபட்ட னர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை கலைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


Next Story