மருத்துவ சேர்க்கை கவுன்சிலிங்கில் பங்கேற்க அனுமதி கோரிய மாற்றுத்திறனாளி மாணவியின் மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி


மருத்துவ சேர்க்கை கவுன்சிலிங்கில் பங்கேற்க அனுமதி கோரிய மாற்றுத்திறனாளி மாணவியின் மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி
x
தினத்தந்தி 4 Aug 2019 12:42 AM GMT (Updated: 4 Aug 2019 12:42 AM GMT)

மருத்துவ சேர்க்கை கவுன்சிலிங்கில் பங்கேற்க அனுமதி கோரிய மாற்றுத்திறனாளி மாணவியின் மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.

மதுரை,

நெல்லை மாவட்டம், வள்ளியூரை சேர்ந்த ஷகிலா, மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘ஒரு விபத்தில் மாற்றுத்திறனாளியான நான் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளேன். மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு மாற்றுத்திறனாளி பிரிவில் விண்ணப்பித்தேன்.

மாற்றுத்திறனாளி பிரிவில் மொத்தமுள்ள 5 சதவீத இடங்களுக்கு 40 முதல் 80 சதவீத பாதிப்பு வரை உள்ளவர்கள் கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம். நெல்லை மண்டல வாரியம் எனக்கு 70 சதவீத மாற்றுத்திறனாளி என சான்றிதழ் அளித்திருந்தது. கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவக்கல்லூரி மண்டல மருத்துவ வாரியத்தில் நடந்த பரிசோதனையில் எனக்கு 85 சதவீதம் பாதித்த மாற்றுத்திறனாளி என்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. 2 விதமாக சான்று அளித்தது அதிர்ச்சியை அளித்தது. இரண்டுவிதமான சான்று அடிப்படையில் கவுன்சிலிங்கில் பங்கேற்க என்னை அனுமதிக்கவில்லை.

இதனால் எனக்கான வாய்ப்பு பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, நெல்லை மண்டல வாரியத்தால் வழங்கப்பட்ட 70 சதவீத மாற்றுத்திறனாளி சான்றிதழ் அடிப்படையில் என்னை கவுன்சிலிங்கில் பங்கேற்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும்‘ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் விசாரித்தார். அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, “திருத்தப்பட்ட விதிகளின்படி, 80 சதவீதத்திற்கு அதிகமான ஊனம் உள்ளவர்கள் மருத்துவம் படிக்க முடியாது. மனுதாரர் 85 சதவீத ஊனம் கொண்டவர். இதனால், அவர் கவுன்சிலிங்கில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது” என்றார்.

இதையடுத்து “மருத்துவ சான்று அளிப்பதற்காக இந்திய அளவில் 10 மருத்துவக்கல்லூரிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையும் ஒன்று.

எனவே, அங்கு வழங்கப்பட்ட சான்றே இறுதியானது. இதன்படி, மனுதாரர் 85 சதவீதம் மாற்றுத்திறனாளி என்பதால் மருத்துவ சேர்க்கைக்கு தகுதியற்றவராகிறார். எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story