ஐஸ்கிரீம் சாப்பிட்டதால் தகராறு: ரெயில் தண்டவாளத்தில் தலை வைத்து தாய்-மகள் தற்கொலை
மோகனூர் அருகே ஐஸ்கிரீம் சாப்பிட்டதால் ஏற்பட்ட தகராறு காரணமாக ரெயில் தண்டவாளத்தில் தலை வைத்து தாய்-மகள் தற்கொலை செய்து கொண்டனர்.
மோகனூர்,
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள நெய்க்காரன்பட்டியில் நேற்று காலை ரெயில் தண்டவாளத்தில் 2 பெண்கள் பிணமாக கிடந்தனர். இதில் இளம்பெண் தலை துண்டாகி கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சேலம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், தண்டவாளத்தில் பிணமாக கிடந்தவர்கள் பரளி ஊராட்சிக்குட்பட்ட ஒத்தையூரை சேர்ந்த கூலித்தொழிலாளி கண்ணையன் என்பவருடைய மனைவி கண்ணகி (வயது 36). இவர்களது மகள் அகல்யா (16) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது கண்ணையனுக்கு ஒரு மகனும், 2 மகள்கள் இருந்ததும், இதில் மூத்த மகள் மற்றும் மகனுக்கு திருமணம் ஆகிவிட்டதும் தெரியவந்தது. இளைய மகள் அகல்யா வளையப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்ததும் தெரியவந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஊரில் நடைபெற்ற கோவில் திருவிழாவுக்கு கண்ணையன், தனது மனைவி கண்ணகி மற்றும் மகள் அகல்யா ஆகியோருடன் சென்றுள்ளார். அங்கு தாய், மகள் 2 பேரும் ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட்டுள்ளனர். அங்கு வந்த அதேபகுதியை சேர்ந்த ஒருவர் நீங்கள் 2 பேர் மட்டும் ஐஸ்கிரீம் சாப்பிடுகிறீர்கள், கண்ணையனுக்கு ஏன் வாங்கி கொடுக்கவில்லையா? என்று கேட்டுள்ளார். அதற்கு கண்ணகி, குடிகாரனுக்கு எதற்கு வாங்கி கொடுக்க வேண்டும் என்று அந்த நபரிடம் கூறியதாக தெரிகிறது.
அதன்பின்னர் கண்ணையன், தனது மனைவி மற்றும் மகளுடன் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது ஐஸ்கிரீம் சாப்பிட்டது தொடர்பாக கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த கண்ணகி தனது மகளுடன் வீட்டில் இருந்து வெளியே சென்று ரெயில் தண்டவாளத்தில் தலை வைத்து தாயும், மகளும் படுத்து கொண்டதும், அந்த வழியாக வந்த ரெயில் அவர்கள் மீது ஏறியதில் 2 பேரும் இறந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
பின்னர் சேலம் ரெயில்வே போலீசார் தாய்-மகள் ஆகிய 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரெயில் தண்டவாளத்தில் தலை வைத்து தாய்-மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story