தர்மபுரி அருகே கார்கள் மோதல்: 2 குழந்தைகள் உள்பட 4 பேர் பலி 5 பேர் காயம்


தர்மபுரி அருகே கார்கள் மோதல்: 2 குழந்தைகள் உள்பட 4 பேர் பலி 5 பேர் காயம்
x
தினத்தந்தி 4 Aug 2019 10:30 PM GMT (Updated: 4 Aug 2019 5:35 PM GMT)

தர்மபுரி அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 4 பேர் பலியானார்கள். மேலும், 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

தர்மபுரி, 

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை சேர்ந்தவர் திருமூர்த்தி (வயது 42). இவர், பென்னாகரத்தில் மெடிக்கல் வைத்து நடத்தி வந்தார். இவரது மனைவி லதா (41). இவர்களது மகன் நிதி அபினவ் (13). மேலும், வேதகிருத்திகா (4) என்ற மகளும் உள்ளாள். லதாவின் சகோதரி மகள் அபிநய கீர்த்தி (9).

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு திருமூர்த்தி, லதா, நிதி அபினவ், வேதகிருத்திகா மற்றும் அபிநய கீர்த்தி ஆகியோர் அதியமான்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு காரில் சென்றனர். அங்கு அவர்கள் உறவினர்களை பார்த்துவிட்டு மீண்டும் அங்கிருந்து பென்னாகரம் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர்.

அதேசமயம், ஒகேனக்கல்லில் இருந்து தர்மபுரியை நோக்கி மற்றொரு கார் வந்தது. இண்டூர் அருகே மல்லாபுரம் என்ற இடத்தில் வந்தபோது, 2 கார்களும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் இருந்த திருமூர்த்தி, அவரது மனைவி லதா, மகன் நிதி அபினவ், மகள் வேதகிருத்திகா, லதாவின் சகோதரி மகள் அபிநய கீர்த்தி ஆகிய 5 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே திருமூர்த்தி, லதா, நிதி அபினவ் ஆகிய 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயத்துடன் வேதகிருத்திகா, அபிநய கீர்த்தி இருவரும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வந்தனர். அதில் அபிநயகீர்த்தி சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தாள்.

அதேபோல், ஒகேனக்கல்லில் இருந்து தர்மபுரி நோக்கி வந்த காரில் இருந்தவர்களான வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த விவேக், ரத்தினவேல், சரவணன், பிரகாஷ், கார் டிரைவர் முருகன் ஆகிய 5 பேரும் காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து இண்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி அருகே கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story