வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் அதிகாரிகளுக்கு எடியூரப்பா உத்தரவு


வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் அதிகாரிகளுக்கு எடியூரப்பா உத்தரவு
x
தினத்தந்தி 5 Aug 2019 4:30 AM IST (Updated: 4 Aug 2019 11:09 PM IST)
t-max-icont-min-icon

வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு, 

வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.

எடியூரப்பா ஆலோசனை

வடகர்நாடகத்தில் பெலகாவி உள்ளிட்ட 5 மாவட்டங்கள் வெள்ளத்திலும், மழையிலும் சிக்கி தவிக்கிறது. இந்த நிலையில் நேற்று பெலகாவி, யாதகிரி, விஜயாப்புரா, பாகல்கோட்டை மாவட்ட கலெக்டர்களுடன், பெங்களூரு கிருஷ்ணா இல்லத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக முதல்-மந்திரி எடியூரப்பா ஆலோசனை நடத்தினார். அப்போது போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளை மேற்கொள்ளும்படி மாவட்ட கலெக்டர்களுக்கு எடியூரப்பா உத்தரவு பிறப்பித்தார்.

மேலும் மக்களுக்கும், கால்நடைகளுக்கும் எந்த விதமான பிரச்சினையும் ஏற்படக்கூடாது. மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கலெக்டர்களுக்கு எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.

போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள்

கிருஷ்ணா ஆற்றையொட்டி உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்க ஏற்பாடுகள் செய்யும்படியும் மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவு பிறப்பித்துள்ளார். குறிப்பாக மக்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும்படியும், மக்களுக்கு எந்த ஒரு தொந்தரவும் ஏற்படாத வண்ணம் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படியும் எடியூரப்பா அறிவுறுத்தி இருக்கிறார்.

தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், ராணுவ வீரர்கள், தீயணைப்பு படைவீரர்கள் மூலமாக மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ளவும், பெலகாவி உள்ளிட்ட மாவட்டங்களில் மேலும் சில நாட்கள் மழை நீடிக்கும் என்பதால், அதற்கு தகுந்தபடி முன் எச்சரிக்கையாக தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை எடுக்கும்படியும் கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் மீட்பு பணி, நிவாரண பணிகளை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர்களின் வங்கி கணக்குகளில் பணம் இருக்கிறது. தேவைப்பட்டால் கூடுதல் நிதி வழங்க அரசு தயாராக இருப்பதாகவும், அதனால் மீட்பு பணிகளில் எந்த விதமான தாமதமும் ஏற்படக்கூடாது என்றும் கலெக்டர்களுக்கு எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.

Next Story