17 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்திற்கு காங்கிரஸ் தலைவர்களே காரணம் எடியூரப்பாவை சந்தித்த பின் பி.சி.பட்டீல் பேட்டி
17 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு, காங்கிரஸ் தலைவர்கள் தான் காரணம் என்று எடியூரப்பாவை சந்தித்த பின்பு பி.சி.பட்டீல் தெரிவித்தார்.
பெங்களூரு,
17 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு, காங்கிரஸ் தலைவர்கள் தான் காரணம் என்று எடியூரப்பாவை சந்தித்த பின்பு பி.சி.பட்டீல் தெரிவித்தார்.
எடியூரப்பாவுடன் சந்திப்பு
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஹிரேகெரூர் தொகுதி எம்.எல்.ஏ.வான பி.சி.பட்டீல் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு மும்பையில் உள்ள ஓட்டலில் ஒரு மாதத்திற்கும் மேலாக தங்கி இருந்தார். அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பின்பும் பெங்களூருவுக்கு திரும்பி வராமல் இருந்தார். நேற்று முன்தினம் இரவு மும்பையில் இருந்து விமானம் மூலம் பெங்களூருவுக்கு திரும்பினார்.
இந்த நிலையில், பெங்களூருவில் உள்ள முதல்-மந்திரி எடியூரப்பாவின் வீட்டுக்கு நேற்று காலையில் பி.சி.பட்டீல் சென்றார். பின்னர் அவர், எடியூரப்பாவுடன் அரை மணிநேரம் ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு வெளியே வந்த பி.சி.பட்டீல் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
அரசியலில் இருந்து ஓரங்கட்ட...
எம்.எல்.ஏ. பதவியில் இருந்து என்னை தகுதி நீக்கம் செய்த காங்கிரஸ் கட்சியை எக்காரணம் கொண்டும் திரும்பி பார்க்கும் பேச்சுக்கே இடமில்லை. எங்களை(தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள்) அரசியலில் இருந்து ஓரங்கட்டவே காங்கிரஸ் தலைவர்கள் நினைக்கின்றனர். பா.ஜனதா கட்சியில் சேருவது குறித்து தொகுதி மக்களுடன் கலந்து ஆலோசித்து இறுதி முடிவு எடுப்பேன். எனது தொகுதி மக்கள் பா.ஜனதாவில் சேர்ந்து ஹிரேகெரூர் தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் தாமரை சின்னத்தில் போட்டியிடுமாறு வலியுறுத்தினால், அதற்கும் தயாராக இருக்கிறேன்.
ஹிரேகெரூர் தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் நான் போட்டியிடுவது உறுதி. என்னை தோற்கடிக்க காங்கிரஸ் தலைவர்கள் எந்த விதமான தந்திரங்களை செய்வார்கள் என்று எனக்கு தெரியும். எனது தொகுதியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தான் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளேன். பணம், மந்திரி பதவிக்கு ஆசைபட்டு பதவியை ராஜினாமா செய்யவில்லை.
காங்கிரஸ் தலைவர்கள் அழுத்தம்
முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமார் ஒருதலை பட்சமாக முடிவு எடுத்து 17 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்திருக்கிறார். ரமேஷ் குமார் எங்களது ராஜினாமாவை அங்கீகரிப்பார் என்று தான் நம்பினோம். ஆனால் எங்களை தகுதி நீக்கம் செய்வார் என்று நினைத்து பார்க்கவில்லை. அவருக்கு, காங்கிரஸ் தலைவர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாகவே அவசர அவசரமாக எம்.எல்.ஏ.க்களை அவர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் சபாநாயகர் பதவியையும் ரமேஷ்குமார் ராஜினாமா செய்துவிட்டார். 17 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர்கள்தான் காரணம். மேலும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மீறியும், அரசியல் சாசனத்திற்கு எதிராகவும் ரமேஷ்குமார் செயல்பட்டுள்ளார்.
ரமேஷ்குமார் எங்களை தகுதி நீக்கம் செய்திருப்பதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளோம். சட்டத்தின் மீதும் சுப்ரீம் கோர்ட்டு மீதும் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் நியாயம் கிடைக்கும். ஹிரேகெரூர் தொகுதியில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கும்படி முதல்-மந்திரி எடியூரப்பாவை சந்தித்து கோரிக்கை விடுத்தேன். அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பி.சி.பட்டீல் கூறினார்.
Related Tags :
Next Story