17 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்து தேவேகவுடாவுடன் குமாரசாமி திடீர் ஆலோசனை


17 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்து தேவேகவுடாவுடன் குமாரசாமி திடீர் ஆலோசனை
x
தினத்தந்தி 5 Aug 2019 4:00 AM IST (Updated: 4 Aug 2019 11:45 PM IST)
t-max-icont-min-icon

17 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்து தேவேகவுடாவுடன் குமாரசாமி நேற்று திடீரென்று ஆலோசனை நடத்தினார்.

பெங்களூரு, 

17 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்து தேவேகவுடாவுடன் குமாரசாமி நேற்று திடீரென்று ஆலோசனை நடத்தினார்.

தேவேகவுடாவுடன் ஆலோசனை

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததை தொடர்ந்து முதல்-மந்திரி பதவியை குமாரசாமி ராஜினாமா செய்துள்ளார். எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ள 17 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததாலும், முதல்-மந்திரி பதவியை இழந்ததாலும் குமாரசாமி விரக்தியில் இருந்து வருகிறார். அரசியலில் நீடிக்கப் போவதில்லை என்று நேற்று முன்தினம் குமாரசாமி தெரிவித்தார்.

இந்த நிலையில், பெங்களூரு பத்மநாபநகரில் உள்ள முன்னாள் பிரதமரும், தனது தந்தையுமான தேவேகவுடாவின் வீட்டுக்கு குமாரசாமி நேற்று காலையில் சென்றார். அங்கு வைத்து தேவேகவுடாவுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக குமாரசாமி ஆலோசனை நடத்தினார்.

தனித்து போட்டியிடுவதா?

அப்போது 17 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், அவர்களது தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதா? அல்லது தனித்து போட்டியிடுவதா?, வேட்பாளர்களாக யாரை நிறுத்தலாம் என்பது குறித்து தேவேகவுடாவுடன் குமாரசாமி ஆலோசித்தார். அதே நேரத்தில் கே.ஆர்.பேட்டை சட்டசபை தொகுதியில் ஜனதாதளம்(எஸ்) சார்பில் நிகிலை வேட்பாளராக நிறுத்துவது பற்றியும் 2 பேரும் ஆலோசித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

குறிப்பாக ஜனதாதளம்(எஸ்) கட்சியில் இருந்து விலகியுள்ள எச்.விஸ்வநாத், கோபாலய்யா, நாராயணகவுடா ஆகியோர் இடைத்தேர்தலில் போட்டியிட்டால், அவர்களை தோற்கடிப்பது குறித்தும், 3 பேருக்கும் எதிராக பலமான வேட்பாளர்களை நிறுத்துவது தொடர்பாகவும் தேவேகவுடாவுடன் குமாரசாமி பேசியதாக தெரிகிறது. இந்த சந்தர்ப்பத்தில் ஜனதாதளம்(எஸ்) கட்சியை பலப்படுத்துவது குறித்தும் 2 பேரும் ஆலோசித்தனர். பின்னர் தேவேகவுடா வீட்டில் இருந்து குமாரசாமி புறப்பட்டு சென்றார்.

Next Story