பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் மீட்பு-தகவல் தொடர்பு சாதனங்கள் வாங்க ரூ.160 கோடி ஒதுக்கீடு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்


பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில்  மீட்பு-தகவல் தொடர்பு சாதனங்கள் வாங்க ரூ.160 கோடி ஒதுக்கீடு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்
x
தினத்தந்தி 4 Aug 2019 11:15 PM GMT (Updated: 4 Aug 2019 6:35 PM GMT)

தேடல், மீட்பு மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களை வாங்குவதற்காக பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் பல்வேறு துறைகளுக்கு ரூ.160 கோடியே 31 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

சென்னை,

பேரிடர் தொடர்பான பணிகளில் ஈடுபடும் முப்படைகள் மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் ஒருங்கிணைந்து ‘வருடாந்திர பேரிடர் தொடர்பான மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண பயிற்சி’ யை ஒவ்வொரு ஆண்டும் நடத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவுறுத்தி உள்ளார்.

அதனடிப்படையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, இந்திய கடற்படை மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் இணைந்து, தமிழகத்தின் அனைத்து கடலோர மாவட்டங்களிலும் புயல் மற்றும் நகர்ப்புற வெள்ளம் குறித்து ‘வருடாந்திர பேரிடர் தொடர்பான மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண பயிற்சி-2019’ கடந்த 2-ந்தேதி முதல் 3 நாட்கள் நடத்தப்பட்டது.

நிறைவு நாளான நேற்று சென்னை மயிலாப்பூர் தாலுகாவில் உள்ள சீனிவாசபுரம் உள்பட மாநிலம் முழுவதும் 12 இடங்களில் ஒத்திகைப் பயிற்சி நேற்று நடந்தது. இதில் புயல் மற்றும் நகர்ப்புறங்களில் வெள்ளம் ஏற்பட்டால் மேற்கொள்ளப்பட வேண்டிய ஆயத்தப் பணிகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

முன்னதாக சென்னை தீவுத்திடலில் அமைக்கப்பட்டுள்ள பேரிடர் தொடர்பான மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண கண்காட்சியை தமிழக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பேரிடர் காலங்களில் கடலோர மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கௌான தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பது, தேசிய பேரிடர் மீட்புப் படை, தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் படை, பல்துறை மண்டலக் குழுக்கள் ஆகியவற்றை ஆயத்த நிலையில் வைத்திருத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்வது குறித்து எடுத்து கூறப்பட்டு உள்ளது. பேரிடர்களின் போது தயார் நிலையில் இருக்கும் வகையில், முதல் நிலை மீட்பாளர்கள் மற்றும் பேரிடர் உதவிப்படையினைச் சார்ந்த தன்னார்வலர்களுக்கும் முன்னெச்சரிக்கை தகவல்கள் அனுப்பப்பட்டு வருகிறது. மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், தொலைத் தொடர்பு நிறுவனங்கள், எண்ணெய் நிறுவனங்கள் ஆகியவற்றின் தொடர் சேவையினை உறுதிப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. இந்த ஒத்திகைப் பயிற்சி மூலம் பலவீனங்கள் கண்டறியவும், குறைபாடுகளை நீக்கவும் உதவிக்கரமாக உள்ளது.

பேரிடர்களின் போது, தேடல், மீட்பு மற்றும் தகவல் தொடர்பினை துரிதப்படுத்துவதற்காக அதிநவீன கருவிகள் வாங்க மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு தீயணைப்பு துறை, சென்னை மாநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம், வனத்துறை, பொதுப்பணித் துறை, ஊர்க்காவல் படை, நெடுஞ்சாலைத் துறை, மீன்வளத்துறை, காவல் துறை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப்படையை மேம்படுத்துவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும், கடலோர பேரிடர் அபாய குறைப்பு திட்டத்தின் கீழ், ரூ.66 கோடியே 14 லட்சம் செலவில் 17 ஆயிரத்து 539 உபகரணங்கள் மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதுவரை தேடல், மீட்பு மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களை கொள்முதல் செய்வதற்காக பல்வேறு தொடர்புடைய துறைகளுக்கு ரூ.160 கோடியே 31 லட்சம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

உடன் கூடுதல் தலைமைச் செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்யகோபால், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ், கஜா புயல் மறுவாழ்வு திட்டஇயக்குனர் டி.ஜெகநாதன், கமாண்டர் ரேகா நம்பியார் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story