தேவூர் அருகே சதுர்த்தி விழாவுக்கு தயாராகும் விநாயகர் சிலைகள்


தேவூர் அருகே சதுர்த்தி விழாவுக்கு தயாராகும் விநாயகர் சிலைகள்
x
தினத்தந்தி 5 Aug 2019 4:00 AM IST (Updated: 5 Aug 2019 12:32 AM IST)
t-max-icont-min-icon

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, தேவூர் அருகே விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தேவூர்,

நாடு முழுவதும் அடுத்த மாதம் (செப்டம்பர்) 2-ந் தேதி விநாயகர் சதுர்த்தி திருவிழா கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பொதுமக்கள், இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.

இதற்காக தேவூர் அருகே மோட்டூர் கிராமத்தில் கைவினைக்கலைஞர்கள், சிற்பிகள், இளைஞர்கள், பெண்கள் என 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் மயில் வாகன கணபதி, கவுரிசிவன் கணபதி, குடும்ப விநாயகர், பாகுபலி விநாயகர், கிரிக்கெட் கணபதி, தேசபற்று கணபதி, விசுவரூப கணபதி, சங்கு கணபதி, நரசிம்ம கணபதி, சிம்மாசன கணபதி, இசை கணபதி, மாயகிருஷ்ண கணபதி, தஞ்சை நந்தி கணபதி, ஜோடி மயில் கணபதி உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட வடிவங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை தயாரித்து வருகின்றனர்.

விநாயகர் சிலை அனைத்தும் மரவள்ளிக்கிழங்கு மாவு, காகித கூழ் போன்ற மூலப்பொருட்களால் தயாரித்து வர்ணம் தீட்டப்பட்டு வருகிறது. மேலும் இந்த ஆண்டு மழை வளத்தை பெருக்க விநாயகர் சிலைகளுடன் ஒரு கவுரி சிலையும், மரக்கன்றும் இலவசமாக பொதுமக்களுக்கு வழங்க இந்த பகுதியில் சிலை செய்வோர் முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து சிலைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள கலைஞர்கள் கூறியதாவது:-

மோட்டூர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் விநாயகர் சிலைகளை தயாரிக்கும் தொழிலை செய்து வருகிறோம். இந்த பகுதியில் பருத்தி, எள், மஞ்சள், கரும்பு, நெல், மக்காச்சோளம், கேழ்வரகு, மரவள்ளிக்கிழங்கு, பச்சைபயறு உள்ளிட்ட பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர். அவ்வாறு விவசாயிகள் சாகுபடி செய்த தானியங்கள் மூலமும் விநாயகர் சிலைகளை வடிவமைத்து வருகிறோம்.

விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும் போது அதில் உள்ள மக்காச்சோளம், பச்சை பயறு, அரிசி, மரவள்ளிக்கிழங்கு மாவு உள்ளிட்டவைகள் மீன்களுக்கு உணவாக பயன்படும். மேலும் தண்ணீர் மாசுபாடு இல்லாமல் பாதுகாக்கப்படுகிறது. இயற்கை வளத்தை பெருக்கி அதிகளவில் மரங்கள் வளர்த்தால் மழை பொழியும் என்பதால் விநாயகர் சிலைகளை வாங்குவோர்களுக்கு கவுரி சிலை, மரக்கன்று இலவசமாக வழங்கி வருகிறோம். இங்கு விநாயகர் சிலைகள் ½ அடி முதல் 16 அடி உயரம் வரை தயாரிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story