கொடுமுடி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி வாலிபர் சாவு; நண்பர்களுடன் குளித்தபோது பரிதாபம்


கொடுமுடி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி வாலிபர் சாவு; நண்பர்களுடன் குளித்தபோது பரிதாபம்
x
தினத்தந்தி 4 Aug 2019 10:30 PM GMT (Updated: 4 Aug 2019 7:02 PM GMT)

கொடுமுடி அருகே நண்பர்களுடன் காவிரி ஆற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

கொடுமுடி,

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ஊத்தாங்குளத்தை சேர்ந்தவர் சண்முகராஜ் (வயது 30). திருமணம் ஆகாதவர். இவர் திருப்பூரில் தங்கியிருந்து அங்குள்ள ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் ஆடிப்பெருக்கையொட்டி சண்முகராஜ் தனது நண்பர்களுடன் ஈரோடு மாவட்டம் கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் அனைவரும் குளிப்பதற்காக கொடுமுடி அருகே உள்ள நாகமநாயக்கன்பாளையம் காவிரி ஆற்றுக்கு சென்றனர். ஆடிப்பெருக்கு என்பதால் பக்தர்கள் புனித நீராடுவதற்காக பாசூர் கட்டளை கதவணையில் இருந்து ஆற்றுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் தண்ணீர் அதிகமாக செல்கிறது.

பின்னர் சண்முகராஜ் நண்பர்களுடன் ஆற்றில் இறங்கி குளித்தார். இதில் சண்முகராஜ் மட்டும் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. மேலும் அவருக்கு நீச்சல் தெரியாது என்றும் கூறப்படுகிறது. இதனால் தண்ணீரில் மூழ்க தொடங்கினார். இதைப்பார்த்த நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தண்ணீரில் தத்தளித்த அவர் ‘‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’’ என்று அபயக்குரல் எழுப்பினர். உடனே அங்கு குளித்து கொண்டிருந்தவர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதில் சிறிதுநேரத்தில் சண்முகராஜ் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றிய தகவல் அந்தப்பகுதி ஆற்றுக்கு பக்தர்களின் பாதுகாப்புக்காக வந்திருந்த கொடுமுடி தீயணைப்பு வீரர்களுக்கு தெரிய வந்தது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறங்கி அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். 3½ மணிநேரத்துக்கு பிறகு சண்முகராஜ் உடல் மீட்கப்பட்டது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கொடுமுடி போலீசார் அங்கு சென்று சண்முகராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story