தாராபுரத்தில் கொங்கு மக்கள் முன்னணியின் மாவட்ட செயலாளர் மீது தாக்குதல் 4 பேர் மீது வழக்கு


தாராபுரத்தில் கொங்கு மக்கள் முன்னணியின் மாவட்ட செயலாளர் மீது தாக்குதல் 4 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 4 Aug 2019 10:45 PM GMT (Updated: 4 Aug 2019 7:17 PM GMT)

தாராபுரத்தில் கொங்கு மக்கள் முன்னணியின் மாவட்ட செயலாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

தாராபுரம்,

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே உள்ள எட்டிவீரம்பாளையம் லட்சுமி கார்டனை சேர்ந்தவர் செல்வமணி. இவருடைய மகன் ஜெயராமன் (வயது 27). இவர் கொங்கு மக்கள் முன்னணி கட்சியில் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளராக உள்ளார். நேற்று முன்தினம் தீரன் சின்னமலை சிலைக்கு அஞ்சலி செலுத்துவதற்காக கட்சித்தலைவர் ஆறுமுகம் மற்றும் தொண்டர்களுடன் சேர்ந்து, ஈரோடு மாவட்டம் ஓடாநிலைக்கு சென்றுள்ளார்.

அங்கு வாகனம் நிறுத்துவதில் கொங்கு மக்கள் முன்னணி கட்சியினருக்கும், கொங்கு இளைஞர் பேரவை கட்சியினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு ஜெயராமனும் அவரது கட்சித்தலைவரும், தொண்டர்களுடன் சேர்ந்து தீரன் சின்னமலையின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியுள்ளனர். பிறகு ஜெயராமன் தனது கட்சித்தலைவர் ஆறுமுகம் மற்றும் கட்சித்தொண்டர்களான பெருமாநல்லூரைச் சேர்ந்த சந்தோஷ் (22) அருணேஷ்வரன் (26) மற்றும் ஜெயலட்சுமணன் (27) ஆகியோருடன் காரில் பழனிக்கு சென்றார். அங்கு கட்சித்தலைவர் ஆறுமுகத்தை அவரது வீட்டில் இறக்கிவிட்டுவிட்டு, மீண்டும் பெருமாநல்லூருக்கு காரில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

கார் தாராபுரம் புறவழிச்சாலை வந்ததும் ஒரு உணவகத்தின் முன்பு காரை நிறுத்திவிட்டு, அனைவரும் இறங்கி சாப்பிடுவதற்காக சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கொங்கு இளைஞர் பேரவையைச் சேர்ந்த தாராபுரம் அருகே உள்ள வேலப்பம்பாளையத்தைச் சேர்ந்த தெய்வசிகாமணி மகன் ரஞ்சித்குமார் (27), இவரது தம்பி நவநீதகிருஷ்ணன் (26) மோகனூர் அருகே உள்ள அய்யம்பாளையத்தைச் சேர்ந்த சின்னச்சாமி மகன் சரவணன் (27), சங்கரண்டாம்பாளைத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் லோகநாதன் (24) ஆகியோர், ஜெயராமனையும், அவருடன் வந்தவர்களையும் தடுத்து நிறுத்தி, இவர்கள் தான் ஓடாநிலையில் நம் கட்சிக்காரர்களுடன் தகராறு செய்தவர்கள் என்று கூறி தாக்கினர்.

இந்த தாக்குதலில் ஜெயராமன் மற்றும் சந்தோஷ் ஆகிய 2 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த தாராபுரம் போலீசார் ஜெயராமனையும், சந்தோசையும் தாக்கிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story