ஆழ்துளை கிணற்று பாசனம் மூலம் சாகுபடி: கோடை நெல் அறுவடை பணிகள் தீவிரம்


ஆழ்துளை கிணற்று பாசனம் மூலம் சாகுபடி: கோடை நெல் அறுவடை பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 4 Aug 2019 10:45 PM GMT (Updated: 4 Aug 2019 7:18 PM GMT)

திருக்காட்டுப்பள்ளி பகுதியில் ஆழ்துளை கிணற்று பாசனம் மூலம் கோடை நெல் சாகுபடி நடைபெற்றது. இதன் அறுவடை பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

திருக்காட்டுப்பள்ளி,

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பகுதியில் காவிரி, கொள்ளிடம் ஆறுகளின் கரையோரம் அமைந்துள்ள கிராமங்களில் ஆழ்துளை கிணற்று பாசனம் மூலம் ஆண்டுதோறும் கோடைநெல் சாகுபடி நடைபெறும். வழக்கம்போல் இந்த ஆண்டும் காவிரி, கொள்ளிடம் ஆறுகளின் கரையோரம் உள்ள சுக்காம்பார், கோவிலடி, திருச்சினம்பூண்டி, அலமேலுபுரம்பூண்டி, விஷ்ணம்பேட்டை, புவனமங்கலம் ஆகிய கிராமங்கள் மற்றும் குடமுருட்டி, வெண்ணாறு ஆகிய ஆறுகளுக்கு இடையில் உள்ள கூடணாணல், வெங்கடசமுத்திரம் ஆற்காடு, அடஞ்சூர், இளங்காடு, கண்டமங்கலம் உள்ளிட்ட கிராமங்களிலும் கோடை நெல் சாகுபடி நடைபெற்றது.

எதிர்பார்த்த அளவு கோடை மழை பெய்யாத நிலையில் கடும் சிரமங்களுக்கு இடையே ஆழ்துளை கிணற்று நீரை மட்டுமே பாய்ச்சி விவசாயிகள் கோடை நெல் சாகுபடி பணிகளை மேற்கொண்டு வந்தனர். சுக்காம்பார், கோவிலடி ஆகிய கிராமங்களில் கோடை நெல் அறுவடை முடிவடைந்து விட்டது. மற்ற கிராமங்களில் தற்போது கோடை நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

எந்திரங்கள் மூலமாக...

பெரும்பாலான இடங்களில் எந்திரங்கள் மூலமாகவே அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- இந்த பகுதியில் கோடை நெல் விளைச்சல் நன்றாக உள்ளது. ஒரு ஏக்கருக்கு 40 மூட்டை முதல் 50 மூட்டை வரை மகசூல் கிடைக்கிறது. அறுவடை நடைபெறும் வயல்களுக்கே வந்து தனியார் வியாபாரிகள் நெல்லை கொள்முதல் செய்து கொள்கிறார்கள்.

62 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை நெல் ரூ.1030-ல் இருந்து ரூ.1,100 வரை விலை போகிறது. கோடை நெல் சாகுபடி செய்யப்பட்ட பகுதிகளில் சில இடங்களில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறந்திருக்கின்றன. இருந்தாலும் வயல்களுக்கு நேரடியாக வரும் தனியார் வியாபாரிகளிடம் நெல்லை விற்பதற்கே பெரும்பாலானவர்கள் ஆர்வமாக உள்ளனர்.

வைக்கோல் விற்பனை

கோடை நெல் அறுவடை பருவத்தையொட்டி இந்த பகுதிகளில் வைக்கோலுக்கும் நல்ல விலை கிடைக்கிறது. கடந்த சம்பா பருவத்தில் ஒரு கட்டு வைக்கோல் ரூ.50-ல் இருந்து ரூ.60 வரை விலை போனது. தற்போது வைக்கோல் ஒரு கட்டு ரூ.140 முதல் ரூ.150 வரை விலை போகிறது.

இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

Next Story