கனமழையால் கொங்கன் ரெயில்வே வழித்தடத்தில் நிலச்சரிவு ராஜ்தானி ரெயில் விபத்தில் இருந்து தப்பியது
கொங்கன் ரெயில்வே வழித்தடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு தண்டவாளத்தில் விழுந்தது. இதில் அந்த வழியாக வந்த ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்தில் இருந்து தப்பியது.
மும்பை,
கொங்கன் ரெயில்வே வழித்தடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு தண்டவாளத்தில் விழுந்தது. இதில் அந்த வழியாக வந்த ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்தில் இருந்து தப்பியது.
நிலச்சரிவு
மும்பையில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக நேற்று நீண்ட தூர மற்றும் மின்சார ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், நேற்று காலை டெல்லியில் ஹஜ்ரத் நிஜாமுதினில் இருந்து கோவா மாநிலம் மட்காவ் நோக்கி கொங்கன் வழித்தடத்தில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டு இருந்தது.
அந்த ரெயிலில் 18 பெட்டிகளில் 750 பயணிகள் இருந்தனர். அந்த ரெயிலை டிரைவர் ஏ.வி. ரத்தோடு என்பவர் இயக்கினார். அந்த ரெயில் பன்வெல் தாண்டி ஆப்தா - பென் ரெயில் நிலையங்களுக்கு இடையே வேகமாக சென்று கொண்டிருந்தது.
அப்போது, மழையின் காரணமாக தண்டவாளம் அருகே உள்ள மலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.
ரெயில் தப்பியது
இதில் மலையில் இருந்து சரிந்த மண் மற்றும் கற்கள் தண்டவாளத்தின் குறுக்கே வந்து விழுந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த என்ஜின் டிரைவர் ஏ.வி. ரத்தோடு உடனடியாக அவசர பிரேக்கை அழுத்தி ரெயிலை நிறுத்தினார்.
இதனால் அந்த ரெயில் தண்டவாளத்தில் மண் சரிந்து கிடந்த இடத்தின் மிக அருகில் வந்து நின்றது. இதன் காரணமாக அந்த ரெயில் பெரும் விபத்தில் இருந்து தப்பியது. பயணிகளும் உயிர் தப்பினார்கள்.
நிலச்சரிவின் காரணமாக கொங்கன் வழித்தடத்தில் ரெயில் சேவை முடங்கியது. அந்த வழியாக வந்த ரெயில்கள் வேறுமார்க்கத்தில் திருப்பிவிடப்பட்டன. மேலும் தாதர் - ரத்னகிரி, புனே- எர்ணாகுளம், திவா-சாவந்த்வாடி உள்ளிட்ட பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.
Related Tags :
Next Story