விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் வெண்டைக்காய் சாகுபடி போதிய விலை நிர்ணயம் செய்ய கோரிக்கை


விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் வெண்டைக்காய் சாகுபடி போதிய விலை நிர்ணயம் செய்ய கோரிக்கை
x
தினத்தந்தி 4 Aug 2019 10:30 PM GMT (Updated: 4 Aug 2019 7:44 PM GMT)

வெண்டைக்காய் சாகுபடி விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துவதால், அதற்கு போதிய விலை நிர்ணயிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டம், வானம் பார்த்த பூமி. கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக போதிய மழை இல்லாததால் மாவட்டம் முழுவதும் வறட்சியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயம் கேள்விக்குறியானது. மேலும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வீசிய கஜா புயல் ஒட்டுமொத்த விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பறித்து சென்றது. கஜா புயலிலிருந்து தற்போதுதான் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் மீண்டுவர துவங்குகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓரிரு நாள் பெய்த மழையை வைத்து அன்னவாசல் அருகே உள்ள செல்லுகுடியில் சுமார் 10 ஏக்கருக்கு மேலாக குறுகிய காலத்தில் பயன் தரக்கூடிய தோட்டப்பயிரான வெண்டைக்காய் சாகுபடியில் அப்பகுதி விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் வெண்டைக்காய் சாகுபடி செய்யும் செலவை விட அதனைகுறைவான விலைக்கே விற்பனைக்கு எடுத்துக்கொள்வதாகவும், வெண்டைக்காய்க்கு போதிய விலை கிடைக்கவில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

விலை நிர்ணயம் செய்ய வேண்டும்

இதுகுறித்து செல்லுகுடி பகுதியை சேர்ந்த விவசாயி கணபதி கூறுகையில், குறுகிய காலத்தில் பலன் தரக்கூடிய தோட்ட பயிரான வெண்டைக்காயை ஒரு ஏக்கரில் சாகுபடி செய்துள்ளோம். போதிய மழை இல்லை, கிணற்றிலும் தண்ணீர் இல்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓரிரு நாள் பெய்த மழையால் வெண்டை செடிகளில் காய்ப்பு சற்று நன்றாக உள்ளது. வெண்டைக்காய் சாகுபடி செய்ததில் 45 நாட்களிலிருந்து காய் காய்க்க தொடங்கி விடும். அதன்பிறகு ஒரு நாள் விட்டு ஒரு நாள் வெண்டைக்காய் செடியிலிருந்து எடுக்கலாம். சாகுபடி செய்யும் வெண்டைக்காயை புதுக்கோட்டையில் உள்ள ஏல கடைக்கு எடுத்து செல்வோம். ஆனால் அங்கு ரூ.10 முதல் 20-க்குள் தான் வெண்டைக்காயை வாங்கி கொள்வார்கள். இது வெண்டைக்காய் சாகுபடி செய்யும் செலவை விட குறைவாகும். போதுமான விலை நிர்ணயம் இல்லை, இதனால் நஷ்டத்திற்கு ஆளாகிறோம். தமிழக அரசு விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை விவசாயிகளே விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கொண்டுவந்தால் மட்டுமே எங்களால் தொடர்ந்து விவசாயம் செய்ய முடியும் என்று வேதனையுடன் தெரிவித்தார்.

வங்கி கடன் தள்ளுபடி

விவசாயி பொன்னம்மாள் கூறுகையில், நாங்கள் 40 ஆண்டுகாலமாக விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகிறோம். ஆனால் விவசாயம் நஷ்டத்தை மட்டுமே ஏற்படுத்தி உள்ளது. இதுநாள் வரை அரசு விவசாயத்திற்கு எந்த ஒரு உதவியும் செய்யவில்லை. தற்போது ஓரிரு நாள் பெய்த மழையை வைத்து வெண்டைக்காய் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால் அதற்கும் போதுமான விலை நிர்ணயம் இல்லை. இதனால் இந்த விவசாயமும் நஷ்டத்தை தான் ஏற்படுத்துகிறது. வங்கியில் கடன் வாங்கி விவசாயம் செய்கிறோம், வங்கி கடனை அரசு தள்ளுபடி செய்தால் விவசாயிகளுக்கு செய்யும் உதவியாக இருக்கும் என்று தெரிவித்தார்.

Next Story