நுண்ணீர் பாசன திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்


நுண்ணீர் பாசன திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 4 Aug 2019 11:00 PM GMT (Updated: 4 Aug 2019 7:52 PM GMT)

நுண்ணீர் பாசன திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்து உள்ளார்.

புதுக்கோட்டை,

பாசன நீரை சேமிக்க உதவும் பிரதமரின் நுண்ணீர் பாசன திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் தமிழகத்தில் மட்டுமே சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.

விவசாயிகள் செலுத்த வேண்டிய நுண்ணீர் பாசன அமைப்புகளுக்கான ஜி.எஸ்.டி. வரியினை தமிழக அரசே ஏற்றுக் கொண்டு உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இத்திட்டம் நடப்பு நிதியாண்டில் வேளாண்மைத்துறை மூலம் 6 ஆயிரத்து 293 எக்டருக்கு ரூ.28 கோடியே 86 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படுகிறது. மேலும் கரும்பு பயிருக்கு சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.97 ஆயிரத்து 134 மற்றும் இதர விவசாயிகளுக்கு ரூ.75 ஆயிரத்து 452 வழங்கப்படுகிறது.

தேவையான ஆவணங்கள்

தென்னை பயிருக்கு சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.27 ஆயிரத்து 770-ம், இதர விவசாயிகளுக்கு ரூ.21 ஆயிரத்து 572-ம் வழங்கப்படுகிறது. மழைத்தூவான் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.36 ஆயிரத்து 176 மற்றும் இதர விவசாயிகளுக்கு ரூ.28 ஆயிரத்து 101 வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் ஆதார் அட்டை, அடங்கல், கணினி சிட்டா, நிலவரைபடம், சிறு, குறு விவசாயிகளாக இருப்பின் தாசில்தாரிடம் இருந்து பெறப்பட்ட சான்று ஆகிய ஆவணங்களுடன் தாங்களாகவே இணையதளத்தில் விண்ணப்பித்து கொள்ளலாம். அல்லது வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி விண்ணப்பித்து இத்திட்டத்தில் பயன்பெறலாம். மேலும், விவரங்களுக்கு அருகே உள்ள வட்டார வேளாண்மைத்துறை அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story