ஊட்டி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் - மாணவ-மாணவிகள் கோரிக்கை


ஊட்டி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் - மாணவ-மாணவிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 4 Aug 2019 10:45 PM GMT (Updated: 4 Aug 2019 8:20 PM GMT)

ஊட்டி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என்று மாணவ-மாணவிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஊட்டி,

ஊட்டி சேரிங்கிராசில் அரசு கலைக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். அவர்கள் விளையாட்டு பயிற்சிகளில் ஈடுபடுவதற்காக மைதானம் உள்ளது. அங்கு கால்பந்து, கைப்பந்து, கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் மாணவ-மாணவிகள் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு குறுமையம், கல்வி மாவட்டம் மற்றும் மாவட்ட அளவில் நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட தடகள போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இங்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தின விழா மற்றும் சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. பெரிய மைதானமாக இருந்தாலும், அங்கு வீரர்கள், வீராங்கனைகளுக்கு தேவையான கழிப்பிடம், குடிநீர், உடை மாற்றும் அறை போன்ற வசதிகள் செய்து கொடுக்கப்பட வில்லை. இதையடுத்து மைதானத்தை சுற்றிலும் சுற்றுச்சுவரோ அல்லது தடுப்பு வேலியோ அமைக்கப்பட வில்லை. இதனால் பகல் நேரங்களில் மைதானத்தில் பசுமையாக வளர்ந்து காணப்படும் புற்களை மேய ஆடு, மாடு, குதிரை போன்ற கால்நடைகள் வருகின்றன.

அவை மைதானத்தை அசுத்தம் செய்து வருகிறது. கால்நடைகள் அங்கேயே படுத்து கிடந்து ஓய்வெடுப்பதால், வீரர்கள் விளையாடுவதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும் மைதானத்தை சுற்றி சுற்றுச்சுவர் கட்டப்படாததால், அங்கு சமூக விரோத செயல்கள் நடப்பதுடன் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. பகல் நேரங்களிலேயே சிலர் மதுபானங்களை வாங்கி வந்து மைதானத்தில் அமர்ந்து மது அருந்தி வருகின்றனர். அவர்கள் காலி மதுபாட்டில்களை தூக்கி வீசி செல்வதால், அது வீரர்களின் கால்களை பதம் பார்க்கும் நிலை உள்ளது. சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு இருக்கிறது.

இதுகுறித்து மாணவ-மாணவிகள் கூறியதாவது:-

ஊட்டி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தின் நான்கு புறங்களில், ஒருபுறம் மட்டும் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு இருக்கிறது. மற்ற மூன்று புறங்களில் சுற்றுச்சுவர் அமைக்கப்படாததால், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஓட்டி பழக சிலர் மைதானத்துக்குள் அத்துமீறி நுழைகின்றனர். இதுபோன்ற சம்பவத்தால் மைதானத்தில் உள்ள புற்கள் சேதமடைகிறது. மேலும் திறந்தவெளி பாராக பயன்படுத்துவதால், ஆங்காங்கே காலி மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவை கிடக்கிறது.

இந்த மைதானத்தில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் வீரர்கள், வீராங்கனைகளுக்கு என தனியாக கழிப்பிடம், உடை மாற்றும் அறை போன்ற வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனால் வீராங்கனைகள் போட்டிகளில் கலந்துகொள்ளும் சமயங்களில் அவதி அடைந்து வருகின்றனர். ஊட்டி எச்.ஏ.டி.பி. விளையாட்டு மைதானம் பயன்பாட்டுக்கு வரவில்லை. ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளி கட்டுப்பாட்டில் உள்ள காந்தி விளையாட்டு மைதானத்தில் சுற்றுலா வாகனங்களை நிறுத்தியதால், மேடு, பள்ளமாக காட்சி அளிக்கிறது.

ஊட்டியில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், இளைஞர்கள் விளையாட்டு பயிற்சிகளில் ஈடுபட அரசு கலைக்கல்லூரி மைதானம் மட்டுமே உள்ளது. எனவே இந்த மைதானத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைத்து, மைதானம் சேதமடையாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு போதுமான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story