வெள்ளிச்சந்தை அருகே நர்சிடம் 7½ பவுன் சங்கிலி பறிப்பு பிரபல கொள்ளையன் மகன் பிடிபட்டான்


வெள்ளிச்சந்தை அருகே நர்சிடம் 7½ பவுன் சங்கிலி பறிப்பு பிரபல கொள்ளையன் மகன் பிடிபட்டான்
x
தினத்தந்தி 5 Aug 2019 3:45 AM IST (Updated: 5 Aug 2019 2:13 AM IST)
t-max-icont-min-icon

வெள்ளிச்சந்தை அருகே நர்சிடம் 7½ பவுன் சங்கிலியை பறித்த பிரபல கொள்ளையன் மகனை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

ராஜாக்கமங்கலம்,

வெள்ளிச்சந்தை அருகே உள்ள மேலசங்கரன்குழி பகுதியை சேர்ந்தவர் பரமசிவம். இவருடைய மனைவி சைலஜா (வயது 52). இவர், நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார்.

நேற்று முன்தினம் மாலையில் சைலஜா வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க ஆசாரிபள்ளத்துக்கு சென்றார். அங்கு, பொருட் களை வாங்கி விட்டு பஸ்சில் மேலசங்கரன்குழி சந்திப்புக்கு வந்து இறங்கி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 3 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள், சைலஜாவின் அருகில் வந்தபோது, திடீரென அவரது கழுத்தில் அணிந்திருந்த 7½ பவுன் சங்கிலியை பறித்தனர்.

பொதுமக்கள் பிடித்தனர்

இதனால், அதிர்ச்சி அடைந்த சைலஜா திருடன்... திருடன்... என்று சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்களை கண்டதும் 3 வாலிபர்களும் தப்பி செல்ல முயன்றனர். அதற்குள் பொதுமக்கள் அவர்களை சுற்றி வளைத்தனர். அதில் ஒருவன் பொதுமக்களிடம் சிக்கினான். மற்ற 2 வாலிபர்கள் நகையுடன் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டனர்.

இதுபற்றி வெள்ளிச்சந்தை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் இருந்து அந்த வாலிபரை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த வாலிபர் குருந்தன்கோடு கொடுப்பைகுழி பகுதியை சேர்ந்த சிவா (வயது 23) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

பிரபல கொள்ளையன் மகன்

சிவா பிரபல கொள்ளையன் சிவசங்குவின் மகன் என்பது தெரியவந்தது. மாவட்டத்தில் பல பகுதிகளில் நடைபெற்ற கொள்ளை மற்றும் நகைப்பறிப்பு சம்பவங்களில் சிவாவுக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகிறார்கள். அதைத்தொடர்ந்து தனிப்படை போலீசாரிடம் சிவா ஒப்படைக்கப்பட்டார். தனிபடை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும், நகையுடன் தப்பி சென்ற 2 வாலிபர்களையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 

Next Story