ஊராட்சி செயலர்களை மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ஊராட்சி செயலர்களை மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 Aug 2019 4:30 AM IST (Updated: 5 Aug 2019 3:26 AM IST)
t-max-icont-min-icon

ஊராட்சி செயலர்களை மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மானாமதுரையில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மானாமதுரை,

மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் சங்கம் சார்பில் ஊராட்சி செயலர்களை மிரட்டும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயலாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி ஒன்றிய ஊராட்சி செயலாளர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் மானாமதுரை ஒன்றியத்தில் அரசின் நலத்திட்டங்களை ஊராட்சி செயலாளர்கள் சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகின்றனர்.

ஆனால் ஒரு சிலர் ஊராட்சி செயலாளர்களை மிரட்டியும், அரசின் நல திட்டங்களை செயல்படுத்த விடாமலும் மிரட்டி வருகின்றனர். மேலும் ஊர் பொதுமக்கள் என்ற பெயரில் அவதூறு பரப்பி போஸ்டர் ஒட்டுவது, போனில் மிரட்டுவது போன்ற அடாவடி செயல்களில் ஈடுபடுவதால் ஊராட்சி செயலாளர்கள் நிம்மதியின்றி தவிக்கின்றனர்.

மாவட்ட நிர்வாகமும் முறையாக விசாரிக்காமல் வாய்மொழியான குற்றச்சாட்டுகளை நம்பி நடவடிக்கை எடுத்து வருகிறது. மாங்குளம் ஊராட்சி செயலாளரை ஒரு கும்பல் மிரட்டி போஸ்டர் ஒட்டியதை நம்பி மாவட்ட நிர்வாகம் இடமாறுதல் செய்துள்ளது. அதனை ரத்து செய்ய வேண்டும். ஊராட்சி செயலாளர்களை மிரட்டும் கும்பல் மீது சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Next Story