‘‘நாடாளுமன்றத்தில் வைகோ பேச்சை ஆதரிக்கிறோம்’’ அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேட்டி


‘‘நாடாளுமன்றத்தில் வைகோ பேச்சை ஆதரிக்கிறோம்’’ அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேட்டி
x
தினத்தந்தி 6 Aug 2019 4:45 AM IST (Updated: 5 Aug 2019 6:57 PM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற மாநிலங்களவையில் வைகோவில் பேச்சை ஆதரிக்கிறோம் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார்.

விருதுநகர்,

வேலூர் நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தமட்டில் அ.தி.மு.க.விற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம். அந்த தொகுதி மக்கள் அ.தி.மு.க. வெற்றி பெற்றால்தான் நல்லது நடக்கும் என்று நினைக்கிறார்கள். தி.மு.க.வின் பொய் பிரசாரம் எடுபடவில்லை. தி.மு.க. பொய் பிரசாரம் செய்கிறது என்று நாங்கள் ஒன்றும் தவறாக கூறவில்லை. மாணவர் கடன் ரத்து, நகைக்கடன் ரத்து உள்பட அனைத்து கடன்களும் ரத்து என ஸ்டாலின் கூறினார். இது சாத்தியமில்லை என்று அவர் சிந்தனைக்கு தெரிந்தும் பொய் பிரசாரம் செய்தார்.

உதாரணமாக விருதுநகர் நகராட்சியில் கிடைக்கும் வருமானத்தில் தான் ஊழியர்களுக்கு ஊதியம், ஓய்வூதியம், மின் கட்டணம் இதர செலவுகள் போக மீதம் உள்ள நிதியிலிருந்துதான் திட்டங்களை செயல்படுத்த முடியும். பொது நிதியில் இருந்து 100 கோடி ரூபாய் எடுக்க முடியுமா? அது சாத்தியப்படாது. அதே போன்று தான் அரசும் செய்ய முடியும். சாத்தியப்படாத திட்டங்களை தி.மு.க. சொல்லி உள்ளது. உங்களுக்கு வீடு கட்டித் தருவேன் என்று சொன்னால் நீங்கள் நம்பித்தானே ஓட்டு போடுவீர்கள்.

வைகோவை பொறுத்தமட்டில் அவர் தமிழகத்திற்காகவும் தமிழ் மக்களுக்காகவும் உரிமை குரல் எழுப்பக்கூடியவர். தமிழகத்தின் கோரிக்கைகளுக்கு உணர்ச்சிபூர்வமாக பேசுவார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் அவர் பேசியதை கேட்டேன். அவரது நிலைப்பாடு வரவேற்க கூடியதுதான். அவரது செயல்பாடு சந்தோசமாகவும் ஊக்குவிப்பதாகவும் உள்ளது. அவரது இந்த செயல்பாடுகளுக்கு ஆதரவு தருகிறோம்.

பிரதமர் மோடி நாட்டில் சமநிலையையும், சமத்துவத்தையும் கொண்டு வர பாடுபடுகிறார். காஷ்மீர் தனி அந்தஸ்து ரத்து குறித்து பிரதமர் தனியாக முடிவு எடுக்கவில்லை. காங்கிரஸ்–தி.மு.க. ஆட்சி காலத்தில்தான் காஷ்மீர் பிரச்சினை, கச்சத்தீவு பிரச்சினை, காவிரி பிரச்சினை, பாலாறு பிரச்சினை, நீட் பிரச்சினை, ஹைட்ரோ–கார்பன் பிரச்சினை என பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன. காங்கிரஸ்–தி.மு.க. ஆட்சி காலத்தில்தான் இந்தியாவும், தமிழகமும் பின்தங்கியது.

அ.தி.மு.க. மக்கள் கட்சி, மக்கள் விரும்புகிற கட்சி. எம்.ஜி.ஆர்.–ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமியும் உழைப்பால் உயர்ந்தவர். மத்திய அரசிடம் தமிழகத்திற்கு தேவையானவற்றை கேட்டு பெறுவோம். கிடைக்காத நிலையில் போராட்டம் நடத்தி கிடைக்க அழுத்தம் கொடுப்போம். இதில் தவறு ஏதும் இல்லை. விருதுநகர் மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் மான்கள் பலியாவதை தடுக்க வனத்துறையிடம் கூறி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு ராஜேந்திர பாலாஜி கூறினார்.


Next Story