உத்தரபிரதேசத்தில் 15 வயது சிறுவன் படுகொலையை கண்டித்து ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய 77 பேர் கைது


உத்தரபிரதேசத்தில் 15 வயது சிறுவன் படுகொலையை கண்டித்து ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய 77 பேர் கைது
x
தினத்தந்தி 6 Aug 2019 4:15 AM IST (Updated: 5 Aug 2019 10:43 PM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேசத்தில் 15 வயது சிறுவன் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து திருச்சியில் ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய 77 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது போலீசாருடன் தள்ளு, முள்ளு நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி,

உத்தரபிரதேசத்தில் ஜெய் ஸ்ரீராம் என்று சொல்ல சொல்லி 15 வயது சிறுவன் எரித்து கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், மாட்டிறைச்சி பெயரால் சிறுபான்மை மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும், தாக்குதல்களை கட்டுப்படுத்திட மத்திய அரசு தனிச்சட்டம் இயற்றிட வலியுறுத்தியும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்து இருந்தனர்.

அதன்படி த.மு.மு.க. மாவட்ட தலைவர் ஷேக்அகமது தலைமையில், மாநில செயலாளர் முகமதுரபீக், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் அப்துல்ரகீம், மாநில துணை செயலாளர் அப்துல்ஹக்கீம், பொருளாளர் சாகுல்அமீது உள்பட ஏராளமான நிர்வாகிகள் ராக்கின்ஸ்ரோட்டில் இருந்து கோரிக்கைகளை வலியுறுத்தி ரெயில் நிலையம் நோக்கி ஊர்வலமாக வந்தனர். இது பற்றி முன்பே தகவல் அறிந்து அங்கு குவிக்கப்பட்டு இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது.

அப்போது அவர்கள், காஷ்மீருக்கு வழங்கி இருந்த 370-வது பிரிவு சிறப்பு சட்டத்தை ரத்து செய்த மத்திய அரசை கண்டித்தும், சிறுப்பான்மை மக்களை பாதுகாக்க தனிச்சட்டம் இயற்ற கோரியும் கோஷங்களை எழுப்பினார்கள். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். மொத்தம் 77 பேர் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

Next Story