ஆம்பூரில் வாக்குச்சாவடி அமைந்துள்ள முக்கிய சாலைகளில் தடுப்புகள் வைத்து போலீசார் கெடுபிடி - வாகன ஓட்டிகள் வாக்குவாதம்


ஆம்பூரில் வாக்குச்சாவடி அமைந்துள்ள முக்கிய சாலைகளில் தடுப்புகள் வைத்து போலீசார் கெடுபிடி - வாகன ஓட்டிகள் வாக்குவாதம்
x
தினத்தந்தி 6 Aug 2019 3:30 AM IST (Updated: 5 Aug 2019 10:57 PM IST)
t-max-icont-min-icon

ஆம்பூரில் வாக்குச்சாவடி அமைந்துள்ள முக்கிய சாலைகளில் தடுப்புகள் வைத்து அடைப்பு ஏற்படுத்தி கெடுபிடி செய்ததாக போலீசாருடன் வாகன ஓட்டிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 ஆம்பூர்,

வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் நேற்று நடந்தது. அதையொட்டி போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர். வாக்குச்சாவடி அமைந்துள்ள பகுதியில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினர் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தனர்.

ஆம்பூர் நகரில் வாக்குச்சாவடி அமைந்துள்ள முக்கிய சாலைகளில் இரும்பு தடுப்புகள் அமைத்து, இருசக்கர வாகன ஓட்டிகள் அந்த சாலையை பயன்படுத்த போலீசார் தடைவிதித்திருந்தனர். பல சாலைகள் இரும்பு தடுப்புகளால் மூடப்பட்டு போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர். இதனால் பொதுமக்கள் வழக்கமாக தாங்கள் செல்லும் சாலையை பயன்படுத்த முடியவில்லை.

ஆம்பூர் இந்து மேல்நிலைப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையையொட்டி உள்ள சர்வீஸ் சாலையை ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் பயன்படுத்தி வருகின்றனர். அந்த சாலையில் தடுப்புகள் அமைத்து பொதுமக்கள் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. பொதுமக்கள் அந்த சாலையில் செல்ல வழிவிடுமாறு போலீசாரிடம் கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டது. இதேபோல் மேலும் சில இடங்களிலும் கெடுபிடி இருந்ததால் போலீசாருக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆம்பூர் மஜ்ஹருல் உலூம் கல்லூரிக்கு செல்ல 2 வழிகள் உண்டு. இங்கு அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு பொதுமக்கள் 2 வழியையும் பயன்படுத்தி வந்தனர். ஆனால் நேற்று போலீசார் ஒருவழியை அடைத்து விட்டு, மற்றொரு வழியாக மட்டுமே அனுமதித்தனர். இதனால் வாக்களிக்க வந்த பலர் வாக்களிக்க செல்லாமல் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அ.செ.வில்வநாதன் எம்.எல்.ஏ. அங்குள்ள போலீசாரிடம் அதுகுறித்து கேட்டார். அப்போது அவர்கள் ஒருவழிதான் என்று கூறிவிட்டனர். அதைத்தொடர்ந்து அவர் கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டை தொடர்பு கொண்டு கூறியதை தொடர்ந்து மற்றொரு வழியையும் பொதுமக்கள் பயன்படுத்த போலீசார் அனுமதித்தனர்.

Next Story