மயிலாடுதுறையை மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறையை மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குத்தாலம்,
மயிலாடுதுறையை மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி நேற்று மயிலாடுதுறை சின்னக்கடைத்தெருவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் நாகை மாவட்ட செயலாளர் மா.ஈழவளவன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் உமாகாந்தன், கட்சியை சேர்ந்த பாரதிவளவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில பொதுச்செயலாளர் ராமசிதம்பரம், முன்னாள் மாவட்ட தலைவர் பண்ணை சொக்கலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் மயிலாடுதுறை பகுதி பொதுமக்களின் 25 ஆண்டு கால கோரிக்கையாக உள்ள மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். கொள்ளிடம், செம்பனார்கோவில், மணல்மேடு ஆகிய ஊர்களை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகாக்கள் உருவாக்க வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார், மணல்மேடு நகர செயலாளர் சீசர் மற்றும் 100–க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.