சாக்கடை கழிவுநீர் தேங்குவதை கண்டித்து பள்ளபாளையம் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை; பெருந்துறை அருகே பரபரப்பு


சாக்கடை கழிவுநீர் தேங்குவதை கண்டித்து பள்ளபாளையம் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை; பெருந்துறை அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 6 Aug 2019 3:45 AM IST (Updated: 6 Aug 2019 12:11 AM IST)
t-max-icont-min-icon

பெருந்துறை அருகே சாக்கடை கழிவுநீர் தேங்குவதை கண்டித்து பள்ளபாளையம் பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெருந்துறை,

பெருந்துறையை அடுத்த காஞ்சிக்கோவில் அருகே உள்ள தண்ணீர்பந்தல்பாளையம், கல்லாஞ்சரளை காலனியை சேர்ந்த பொதுமக்கள், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய விவசாயிகள் சங்க நிர்வாகிகளுடன் நேற்று காலை 10 மணி அளவில் பள்ளபாளையம் பேரூராட்சி அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் தங்கள் பகுதிகளில் சாக்கடை கழிவுநீர் தேங்குவதை கண்டித்து திடீரென அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் பேரூராட்சி அலுவலர் ராஜேந்திரன் மற்றும் காஞ்சிக்கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது பொதுமக்கள் கூறுகையில், ‘பள்ளபாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட தண்ணீர்பந்தல்பாளையம், கல்லாஞ்சரளை காலனியில், 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்தப் பகுதிகளில் கடந்த 5 ஆண்டுகளாக சாக்கடை கழிவுநீர் வெளியேற வசதி இல்லாமல் தேங்கி நிற்கிறது.

இதனால் சுற்றுச்சூழல் மாசு அடைவதோடு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் வீடுகளில் எங்களால் வசிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதேபோல் கழிவுநீரால் ஆழ்குழாய் கிணறுகளில் உள்ள தண்ணீர் மாசு அடைகிறது. அதனால் சாக்கடை கழிவுநீர் வெளியேறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். மேலும் இதுதொடர்பாக மாவட்ட கலெக் டர், மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் பேரூராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்தோம்.

ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என்றனர். அதற்கு அதிகாரிகள் ‘90 நாட்களுக்குள் சாக்கடை கழிவுநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்’ என்று உறுதி அளித்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு பகல் 11 மணி அளவில் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story