3½ லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் கலெக்டர் தகவல்
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் 3 லட்சத்து 45 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படும் என்று கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்தார்.
பள்ளிப்பட்டு,
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த ஆர்.கே.பேட்டை ஒன்றியம் சந்தானவேணுகோபாலபுரம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.92 லட்சத்தில் பூமராகவரத்து கால்வாயில் கிணறு அமைத்தல், ரூ.3 லட்சத்தில் மரக்கன்றுகள் நடும் பணிகளுக்கான தொடக்கவிழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் கலந்துகொண்டு மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கிவைத்தார்.
அப்போது அவர் கூறும்போது, மாவட்டத்தில் கொசஸ்தலை ஆறு, கூவம் ஆறு, ஆரணி ஆறு, நந்தி ஆறு ஆகியவற்றில் தண்ணீர் மட்டம் அதிகரிக்கும் வகையில் நீர் உறிஞ்சு கிணறுகள் அமைத்து நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் பாதுகாக்க இத்திட்டம் பயன்படும்.
மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு, இந்த மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் 3 லட்சத்து 45 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் திருத்தணி எம்.எல்.ஏ., பி.எம்.நரசிம்மன், திருத்தணி ஆர்.டி.ஓ. நாராயணன், ஆர்.கே. பேட்டை தாசில்தார் பாண்டியராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story