திருப்புவனத்தில் ஊருணி தோண்ட எதிர்ப்பு; கலெக்டரிடம் மனு


திருப்புவனத்தில் ஊருணி தோண்ட எதிர்ப்பு; கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 5 Aug 2019 10:15 PM GMT (Updated: 5 Aug 2019 7:18 PM GMT)

திருப்புவனத்தில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் ஊருணி தோண்டுவதை நிறுத்த வேண்டும் என கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

சிவகங்கை,

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பயிர் காப்பீடு வழங்க கோருவதல், ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, குடிநீர் ஊருணிகளை சீரமைப்பது, பட்டா மாறுதல், வேலை வாய்ப்பு வழங்க கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 400 பேர் மனு கொடுத்தனர். இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவிட்டார்.

கூட்டத்தில் சிங்கம்புணரியை அடுத்த எஸ்.வி.மங்கலம் கிராம மக்கள் சார்பில் பழ.மாரியப்பன் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

சிங்கம்புணரி வட்டம் எஸ்.வி.மங்கலத்தில் சுமார் 2 ஆயிரம் வீடுகள் உள்ளன. இந்த கிராமத்தில் உள்ள குளங்கள் மற்றும் குடிநீர் ஊருணி கடந்த 20 ஆண்டுகளாக எந்தவித மராமத்து பணியும் நடைபெறாமல் உள்ளது. இதனால் இந்த பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே எங்கள் கிராமத்தில் உள்ள குளம், ஊருணிகளை சீரமைத்து குடிதண்ணீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.

இதேபோல் மாவட்ட தி.மு.க. துணைச்செயலாளர் சேங்கைமாறன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தண்டியப்பன், ஒன்றிய செயலாளர் அய்யம்பாண்டி, ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சேகர், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் சுந்தரலிங்கம் ஆகியோர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

திருப்புவனம் பேரூராட்சிக்கு சொந்தமான அரசு புறம்போக்கு இடம் 1.75 ஏக்கர் உள்ளது. இந்த இடம் பல ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வந்தது. கடந்த 1999-ம் ஆண்டு முதல் தற்போது வரை இங்கு காய்கறி மற்றும் ஆடு, மாடு சந்தை இயங்கி வந்தது. இந்த இடத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து நூலகம் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியில் அரசு பெண்களின் மேல்நிலைப்பள்ளியின் சுற்றுச்சுவர் மற்றும் விளையாட்டு மைதானம் உள்ளது.

இதன் அருகில் தனியார் பள்ளி ஒன்றும் இயங்கி வருகிறது. இந்தநிலையில் இந்த இடத்தை தற்போது ஊருணி அமைப்பதற்காக தோண்டி வருகின்றனர். எனவே இந்த இடத்தை ஊருணி அமைக்காமல் அருகில் உள்ள மேல்நிலைப்பள்ளிக்கு பயன்படும் வகையில் புதிய வகுப்பறை கட்டிடம் அமைத்து தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.

Next Story