குறைதீர்க்கும் நாள் கூட்டம்: குடிநீர்கேட்டு பொதுமக்கள் கலெக்டரிடம் மனு


குறைதீர்க்கும் நாள் கூட்டம்: குடிநீர்கேட்டு பொதுமக்கள் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 5 Aug 2019 10:15 PM GMT (Updated: 5 Aug 2019 7:21 PM GMT)

கரூரில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குடிநீர்கேட்டு பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

கரூர்,

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பிரதான கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து 339 கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார்.

இந்த கூட்டத்தில், அரவக் குறிச்சி தாலுகா தும்பிவாடி கிராமம் சக்தி நகரை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், எங்கள் ஊரில் மேல் நிலைநீர்த்தேக்க தொட்டிக்கு காவிரிகுடிநீரை கொண்டு வந்து வினியோகிக்க முடியாத நிலை உள்ளது. எனவே தகுந்த நடவடிக்கை எடுத்து தடையின்றி காவிரிக்குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். மேலும் எங்கள் பகுதியில் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே சாலை வசதி மற்றும் தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

இதேபோல், கரூர் அருகே கே.ஆலமரத்துப்பட்டி கிராமம் ஆர்ச் காலனியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், கடந்த 4 மாதங்களாக எங்கள் ஊரில் குடிநீர் பற்றாக்குறையால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். குளிப்பது உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு தண்ணீரில்லாமல் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்பறைகளுக்கும், வேலைக்கு செல்வோர் தங்களது பணியிடங்களுக்கு காலையில் செல்வதற்கு மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைத்து தடையின்றி குடிநீர் வினியோகிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். இதே போல், வெள்ளியணை வடக்கு சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்களும் சீராக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி மனு கொடுத்தனர்.

காதப்பாறை ஊராட்சி குளம் தூர்வாரப்படுமா?

தாந்தோன்றிமலையை சேர்ந்த ஜெகதீசன் உள்பட வழக்கறிஞர்கள் அளித்த மனுவில், சாதி பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் பேசிய தஞ்சாவூர் மாவட்ட பல்கலைக்கழக பேராசிரியர் மீது சட்டரீதியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர். கரூர் பா.ஜ.க.வின் மாவட்ட மருத்துவரணி தலைவர் ரமேஷ், இளைஞரணி செயலாளர் கராத்தே திருநாவுக்கரசுராஜா உள்பட நிர்வாகிகள் திரண்டு வந்து அளித்த மனுவில், கரூர் மாவட்டத்தில் பொதுமக்களின் விருப்பத்திற்கு மாறாக அவர்களை மதமாற்றம் செய்ய முயற்சிப்பவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். காதப்பாறை ஊராட்சியில் மழைநீரை தேக்கி வைக்கும் வகையில் உள்ள ஊராட்சி குளத்தில் குப்பைகள், கட்டிட இடிபாடுகள் கொட்டப்பட்டு வருகிறது. எனவே அதனை தூர்வாரிட வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் இலக்குவன் உள்பட கரூர் விவசாய சங்க பிரதிநிதிகள் அளித்த மனுவில், நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு உற்பத்தி செலவுகள் அதிகரித்து வரும் வேளையில், விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. இதனால் விவசாயிகள் பரவலாக கடன் சுமைக்கு ஆளாக்கப்பட்டு தற்கொலை முடிவுக்கு வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. எனவே கடன் தொல்லையில் இருந்து விவசாயிகளை காக்கும் விதமாக விவசாயிகள் விடுதலை சட்டம், உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்கும் வகையிலான சட்டம் ஆகியவற்றை அமல் படுத்த வேண்டும் என்கிற மசோதாக்கள் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த விவசாயிகள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதன் பிறகு இந்திய நாடாளுமன்றத்தில் இதனை அமல் படுத்துவதில் இழுபறி உள்ளது. எனவே இதனை உடனடியாக அமல்படுத்திட ஜனாதிபதிக்கு பரிந்துரைத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

கரூர் மாவட்டம் பெரிய தாதம் பாளையத்தை சேர்ந்த சிலர் அளித்த மனுவில், நாங்கள் நீண்ட நாட்களாக பெரியதாதம்பாளையத்தில் வசித்து வருகிறோம். இந்த நிலையில் சில காரணங்களைக்கூறி எங்களது வீடு, நிலத்தை அகற்றுவதற்கான வேலையில் சிலர் ஈடுபடுகின்றனர். எனவே எங்களது வீடு, நிலத்தை மீட்டு தர வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். தோகைமலை கீழவெளியூரில் பாட்டியின் அரவணைப்பில் இருந்த 3 ஆண், 2 பெண் குழந்தைகளை பாதுகாப்பு கருதி மாவட்ட குழந்தைககள் பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் கரூரில் உள்ள காப்பகத்தில் தங்க வைக்க அனுமதி கேட்டு கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. மனுக்களை பெற்ற கலெக்டர் இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பதில் கூறினார்.

இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், பயிற்சி துணை கலெக்டர் விஷ்ணுபிரியா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அதிகாரி லீலாவதி, மாவட்ட வழங்கல் அதிகாரி மல்லிகா, கலால் துணை உதவி ஆணையர் மீனாட்சி, மாற்றுத்திறனாளிகள் அலுவலர் ஜான்சி, மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி மருத்துவர் சசிதீபா உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக உணவு பொருட்களின் தரம் குறித்து புகார் அளிக்கும் விதமாக 94440-42322 என்கிற வாட்ஸ்-அப் எண்ணை கலெக்டர் வெளியிட்டார். இதில் வரப்பெறும் புகார்கள் குறித்து உடனுக்குடன் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.

Next Story