செங்கல்பட்டு-கடற்கரை ரெயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி 2 பேர் கவலைக்கிடம்
செங்கல்பட்டு- சென்னை கடற்கரை விரைவு மின்சார ரெயிலில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த வாலிபர் தவறிவிழுந்து பரிதாபமாக இறந்தார். மேலும் 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தாம்பரம்,
சென்னை புறநகர் பகுதிகளில் வசிக்கும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், அலுவலகங்களில் பயணியாற்றுபவர்கள் மின்சார ரெயில்களை பயன்படுத்தியே சென்னை வந்து செல்கின்றனர். இதனால் காலை, மாலை நேரங்களில் மின்சார ரெயில்களில் கூட்டம் அலைமோதும்.
இந்த நிலையில் செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு நேற்று காலை 9.30 மணியளவில் விரைவு மின்சார ரெயில் வந்துகொண்டிருந்தது. ரெயிலில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் பலர் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்தனர்.
பெருங்களத்தூர்-தாம்பரம் இடையே இரும்புலியூர் அருகே ரெயில் வந்தபோது, படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த ஊரப்பாக்கம் பகுதியை அருள்முருகன் (வயது 17) என்பவர் ரெயிலில் இருந்து தவறி விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சகபயணிகள், ரெயிலை நிறுத்தும்படி கூச்சலிட்டனர். ஆனால் அதற்குள் ரெயில் தாம்பரம் ரெயில் நிலையம் அருகே சென்றுவிட்டது.
மேலும் 2 பேர்
அப்போது அதே ரெயிலின் மற்றொரு பெட்டியில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்து வந்த செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த தினேஷ் (25) மற்றும் அருண்பாண்டி முனியசாமி (24) ஆகிய மேலும் 2 பேர் ரெயிலில் இருந்து தவறி விழுந்தனர். இதில் தினேசுக்கு வலது கால் துண்டானது. அருண்பாண்டி சுயநினைவை இழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தாம்பரம் ரெயில்வே போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
வாலிபர் பலி
இதில் அருள்முருகன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தினேஷ் மற்றும் அருண்பாண்டி இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பாக தாம்பரம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பரங்கிமலை ரெயில் நிலையத்தில் ரெயில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த 5 பேர் தடுப்பு சுவரில் மோதி பலியானார்கள். இதையடுத்து விரைவு மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு இருந்தது. பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகு கடந்த மாதத்தில் இருந்துதான் மீண்டும் விரைவு மின்சார ரெயில் சேவை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story