ஆசாரிபள்ளத்தில் மருத்துவ மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்: பயிற்சி டாக்டர்கள் பணிக்கு செல்லவில்லை


ஆசாரிபள்ளத்தில் மருத்துவ மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்: பயிற்சி டாக்டர்கள் பணிக்கு செல்லவில்லை
x
தினத்தந்தி 6 Aug 2019 3:45 AM IST (Updated: 6 Aug 2019 1:55 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். பயிற்சி டாக்டர்கள் பணிக்கு செல்லவில்லை.

நாகர்கோவில்,

மத்திய அரசு தேசிய மருத்துவ ஆணையம் அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் டாக்டர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் மருத்துவ மாணவ -மாணவிகளும் இந்த ஆணையத்துக்கு எதிராகவும், மருத்துவ கல்வியில் நெக்ஸ்ட் தேர்வை புகுத்த கூடாது, இணைப்பு படிப்புகள் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியிலும் மாணவ-மாணவிகள் பல போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதாவது ஆர்ப்பாட்டம், மனித சங்கிலி போராட்டம், மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு உள்ளன. மேலும் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் மாணவர்கள் கூறினர்.

இந்த நிலையில் நேற்று மாணவ- மாணவிகள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் போராட்டம் நடத்தினர். பின்னர் தமிழ்நாடு மருத்துவ மாணவர் சங்கம் சார்பில் ஆஸ்பத்திரி வளாகத்தில் தர்ணா போராட்டம் நடந்தது. இதற்கு மாணவர் பேரவை தலைவர் யாதவ் தலைமை தாங்கினார்.

இந்திய மருத்துவர் சங்க நிர்வாகி டாக்டர் ஜெயலால், ஜனநாயக தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்க நிர்வாகி சுரேஷ்பாலன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதே போல் பயிற்சி டாக்டர்களும் நேற்று தங்களது பணிகளை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்த தர்ணா போராட்டமானது காலை 8 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடந்தது. போராட்டம் காரணமாக ஆஸ்பத்திரி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Next Story