நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை, பில்லூர் அணையில் இருந்து வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு
நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்வதால் பில்லூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காரமடை வெள்ளியங்காடு அருகே மேற்குதொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் இயற்கை சூழலில் பில்லூர் அணை உள்ளது. இந்த அணை 100 அடி உயரம் கொண்டது.
தென்மேற்கு பருவ மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்வதால் பில்லூர் அணைக்கு நாளுக்கு நாள் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை அணையின் நீர்மட்டம் 87 அடியாக இருந்தது.
நேற்று காலை 6 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 636 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 87 அடியில் இருந்து 94 அடியாக உயர்ந்தது. இதையடுத்து அணையில் மின் உற்பத்திக்காக தண்ணீர் திறக்கப்பட்டது.
மின்உற்பத்திக்காக அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அணைக்கு வரும் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் காலை 11 மணிக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாகவும், மதியம் 12 மணிக்கு 15 ஆயிரம் கனஅடியாகவும் உயர்ந்தது.
தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்தால் அணையின் நீர்மட்டம் 97 அடியை எட்டியது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி மதியம் 12.30 மணிக்கு அணையின் 4 மதகுகளும் திறக்கப்பட்டன. அணையில் இருந்து வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
இதன் காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றில் வெள்ளம் இருகரைகளையும் தொட்டபடி பாய்ந்தோடியது. பில்லூர் அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் அத்திக்கடவு, நெல்லித்துறை, மேட்டுப்பாளையம், ஆலாங்கொம்பு, சிறுமுகை ஆகிய பகுதிகளில் உள்ள பாலங்களை தொட்டுவிடும் அளவிற்கு வெள்ளம் பாய்ந்தோடியது.
பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் கிடுகிடு என உயர்ந்தது. இந்த நிலையில் மாலை 5 மணிக்கு பில்லூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இதனால் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.
மாவட்ட கலெக்டர் ராஜாமணி உத்தரவின் பேரில் மேட்டுப்பாளையம் தாசில்தார் சாந்தாமணி ஆற்றின் கரையோரப்பகுதிகளுக்கு சென்று வெள்ளப்பெருக்கை பார்வையிட்டார். அவர் வெள்ள அபாய தடுப்புக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதையடுத்து ஆற்றின் கரையோரங்களில் உள்ள குடியிருப்புகளில் ஒலிபெருக்கி மூலமும் தண்டோரா மூலமும் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. மேலும் தாழ்வான பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்புக்கருதி தங்கள் உடைமைகள் மற்றும் கால்நடைகளுடன் மேடான பகுதிக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.
அதைத்தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துணை போலீஸ் சூப்பிரண்டு தேன்மொழிவேல், வருவாய் ஆய்வாளர் பாலமுருகன், கிராமநிர்வாக அலுவலர் மூர்த்தி மற்றும்பிற அரசு துறை அதிகாரிகள் சென்று பார்வையிட்டனர். பவானி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதை பொதுமக்கள் கூட்டமாக சென்று பார்த்தனர்.
இதுகுறித்து கலெக்டர் ராஜாமணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் பொதுமக்கள் யாரும் ஆற்றை கடக்கவோ, ஆற்றில் இறங்கவோ கூடாது. மேலும் தாழ்வான பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story