பெற்றோர்களே உஷார்... பெங்களூருவில் குழந்தைகளுக்கு வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்


பெற்றோர்களே உஷார்... பெங்களூருவில் குழந்தைகளுக்கு வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்
x
தினத்தந்தி 5 Aug 2019 10:33 PM GMT (Updated: 5 Aug 2019 10:33 PM GMT)

பெங்களூருவில் குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் பெற்றோர்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

பெங்களூரு,

பெங்களூரு நகரில் டெங்கு காய்ச்சலால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் குழந்தைகளை ஒருவித காய்ச்சல் தாக்குகிறது. 2 முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை தாக்கும் இந்த காய்ச்சல் டெங்கு வகையை சேர்ந்தது ஆகும். அதாவது, டெங்கு மற்றும் மலேரியா காய்ச்சலுக்கான அறிகுறியுடன் சிறுவர்களை தாக்கும் இந்த காய்ச்சலை பிரித்தறிவது சற்று சிரமமான ஒன்றாக உள்ளது.

தற்போதைய காலநிலை மாற்றம், மழலையர் பள்ளி செல்லும் குழந்தைகளை தாக்கும் வைரஸ் தொற்றுகள் தான் இந்த காய்ச்சலுக்கு மூலக்காரணம் என்று கூறப்படுகிறது. இந்த காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளுக்கு காய்ச்சலின் அளவு அதிகமாக இருக்கும். இருமல், சளி, காய்ச்சல் மற்றும் அதிக நடுக்கம் ஆகியவை டெங்கு வகை காய்ச்சலுக்கான அறிகுறியாகும்.

இந்த காய்ச்சல் தற்போது பெங்களூருவில் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க பெற்றோர்கள் முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டும். எந்த வகையான காய்ச்சல் வந்தாலோ அல்லது அதற்கான அறிகுறி தெரிந்தாலோ பெற்றோர்கள் அருகே உள்ள குழந்தைகள் நல டாக்டரை அணுகி முறையான சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும்.

இதுகுறித்து குழந்தைகள் நல டாக்டர்கள் கூறுகையில், ‘பகல் நேரத்தில் கடிக்கும் ‘ஏடிஸ்‘ வகை கொசுவால் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. ஆனால் டெங்கு வகை காய்ச்சல் இருமல், சளி, நாள்பட்ட காய்ச்சல் உள்ளிட்ட டெங்கு, மலேரியா காய்ச்சல் ஆகியவற்றின் அறிகுறிகளை தான் கொண்டு உள்ளது. இதனால் ரத்த பரிசோதனை உள்ளிட்ட சோதனைகளுக்கு பிறகு தான் டெங்கு வகை காய்ச்சலை கண்டுபிடிக்க முடியும். இதற்கு 4 நாட்கள் வரை ஆகும். இந்த காய்ச்சல் பரவுவதற்கு வைரஸ் தான் முதன்மை காரணமாக உள்ளது. காற்று நுழைவு குறைவாக இருக்கும் வகுப்பறையில் அதிக மாணவர்கள் நெருக்கமாக இருக்கும் நிலையில் இருமல் மூலம் பரவும் வைரஸ் காரணமாக பச்சிளம் குழந்தைகளுக்கு இந்த காய்ச்சல் பரவுகிறது. முறையான சிகிச்சை தான் டெங்கு வகை காய்ச்சலை கட்டுப்படுத்த சரியான வழியாகும்‘ என்கிறார்கள்.

டெங்கு வகை காய்ச்சலில் இருந்து குழந்தைகளை காக்க பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சுத்தமான குடிநீர், பழச்சாறு வழங்கலாம். இளநீர் கொடுக்கலாம். இதுதவிர திரவ ஆகாரங்களை கொடுக்க வேண்டும். ஒருவேளை டெங்கு வகை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு இருந்தால் அதன்பிறகு டாக்டர்களின் அறிவுரைப்படி மருந்து, மாத்திரைகள் எடுத்து கொள்ள வேண்டும்.

Next Story