பெங்களூரு மாநகராட்சி பட்ஜெட்டுக்கு அனுமதி ரத்து: முதல்-மந்திரி எடியூரப்பா தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் தினேஷ் குண்டுராவ் வலியுறுத்தல்


பெங்களூரு மாநகராட்சி பட்ஜெட்டுக்கு அனுமதி ரத்து: முதல்-மந்திரி எடியூரப்பா தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் தினேஷ் குண்டுராவ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 6 Aug 2019 4:09 AM IST (Updated: 6 Aug 2019 4:09 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு மாநகராட்சி பட்ஜெட்டுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்ட விஷயத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தினேஷ் குண்டுராவ் வலியுறுத்தினார்.

பெங்களூரு,

கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் எனது தலைமையில் நடைபெற்றது. இதில் பெங்களூருவின் வளர்ச்சி குறித்து விவாதித்தோம். சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது பெங்களூரு வளச்சிக்கு சிறப்பு நிதி தொகுப்பு ரூ.8,000 கோடி ஒதுக்கப்பட்டது. இதில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சாலைகளை அகலப்படுத்துதல், பாலங்கள் கட்டுதல், சிமெண்டு சாலைகள் அமைத்தல் என்று பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன் பிறகு காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அரசிலும் பெங்களூருவின் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கப்பட்டது. பெங்களூரு மாநகராட்சியின் 2019-20-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டுக்கு கூட்டணி அரசு ஒப்புதல் வழங்கியது. அந்த பட்ஜெட்டில் நிதி அளவை குறைத்து அனுமதி வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து அந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு டெண்டர் விடும் பணிகள் முடிந்துள்ளன. சில திட்ட பணிகள் தொடங்கிவிட்டன.

இந்த நிலையில் இந்த மாநகராட்சி பட்ஜெட்டுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை மாநில அரசு ரத்து செய்துள்ளது. இது சரியல்ல. எந்த ஆட்சி காலத்திலும் இவ்வாறு நடந்தது இல்லை. சட்டசபை தொகுதிகளுக்கு கட்சி அடிப்படையில் நிதி ஒதுக்கவில்லை. பாரபட்சம் இல்லாமல் நிதி ஒதுக்கப்பட்டன. பணிகள் தரமாக இல்லை என்று முதல்-மந்திரி எடியூரப்பா சொல்கிறார். அவ்வாறு சந்தேகம் இருந்தால், பணிகளின் தரம் குறித்து அதிகாரிகளிடம் அவர் விவரங்களை பெறட்டும். ஆனால் திடீரென அனுமதியை அரசு ரத்து செய்துள்ளது சரியல்ல.

முன்பு சித்தராமையா முதல்-மந்திரியாக பதவி ஏற்றபோது, அதற்கு முன்பு பா.ஜனதா ஆட்சியில் பெங்களூருவின் வளர்ச்சிக்கு மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் ரத்து செய்யப்படவில்லை. அதை தொடர்ந்து அமல்படுத்தினோம். பெங்களூருவின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு நாங்கள் பேசுகிறோம். மாநில அரசின் முடிவால் பெங்களூருவில் வளர்ச்சி பணிகள் பாதிக்கப் படும்.

அதனால் மாநகராட்சி பட்ஜெட்டுக்கான அனுமதியை ரத்து செய்த விஷயத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா, தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதுகுறித்து அவரை சந்திக்க நேரம் ஒதுக்குமாறு கேட்டுள்ளோம். நேரம் ஒதுக்கப்பட்டதும், அவரை சந்தித்து எங்களின் கோரிக்கையை அவரிடம் எடுத்துக்கூற உள்ளோம்.

இவ்வாறு தினேஷ் குண்டுராவ் கூறினார்.

இந்த பேட்டியின்போது முன்னாள் மந்திரிகள் கே.ஜே.ஜார்ஜ், ராமலிங்கரெட்டி, கிருஷ்ண பைரேகவுடா ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story