தனியார் மயமாக்க எதிர்ப்பு, சேலம் உருக்காலை தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்


தனியார் மயமாக்க எதிர்ப்பு, சேலம் உருக்காலை தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 6 Aug 2019 4:30 AM IST (Updated: 6 Aug 2019 5:56 AM IST)
t-max-icont-min-icon

தனியார் மயமாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் உருக்காலை தொழிலாளர்கள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

சேலம்,

தமிழகத்தில் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக சேலம் உருக்காலை விளங்கி வருகிறது. இந்த உருக்காலையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இதற்காக செயில் நிர்வாகம் சேலம் உருக்காலை உள்பட 3 ஆலைகளை விற்க சர்வதேச டெண்டருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

கடந்த 1-ந் தேதி வரை டெண்டர் கோரலாம் என்று அறிவித்து இருந்தநிலையில், தற்போது டெண்டருக்கு வருகிற 20-ந் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி சேலம் உருக்காலையை வாங்க விரும்பும் தனியார் நிறுவனத்தினர் அதனை பார்வையிட ஆலைக்கு வர உள்ளதாக தகவல் வெளியானது.

இது தொடர்பான தகவல்களை யாருக்கும் தெரிவிக்க இயலாது என தொழிற்சங்க நிர்வாகிகளிடம் செயில் நிறுவனம் தெரிவித்து விட்டது. இதனால் சேலம் உருக்காலையை பார்வையிட தனியார் துறையினர், எந்த நேரத்திலும் வரலாம் என்பதால் அதனை தடுக்க முன்னேற்பாடுகளை தொழிற்சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் எடுத்துள்ளனர்.

இந்தநிலையில், உருக்காலையில் உள்ள அனைத்து தொழிற்சங்கத்தினர், “தனியார் துறையினரை உள்ளே நுழைய அனுமதிக்க மாட்டோம்“ என வலியுறுத்தும் வகையில் நேற்று சேலம் உருக்காலையின் பிரதான நுழைவு வாசலின் முன்பு காத்திருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

இதில் தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யு.சி உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட உருக்காலை தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அவர்கள் உருக்காலைக்கு வரும் வாகனங்களை சோதனை செய்த பிறகே ஆலைக்குள் செல்ல அனுமதித்து வருகிறார்கள். மேலும், தனியார் துறையினர் ஆலைக்குள் செல்லாதவாறு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உருக்காலை தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-

சேலம் உருக்காலை தொழிலாளர்களின் பல்வேறு கட்ட போராட்டத்தை கண்டுகொள்ளாமல் மத்திய அரசு, தொடர்ந்து தனியார் மயமாக்கல் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக வருகிற 20-ந் தேதிக்குள் தனியார் நிறுவனத்தினர் உருக்காலையை பார்வையிட வருவதாக தகவல் வந்துள்ளது. அவர்களை ஆலைக்குள் அனுமதிக்காமல் திருப்பி அனுப்புவதற்காக இந்த காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. 24 மணி நேரமும் சுழற்சி முறையில் இந்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். தனியார் மயமாக்கும் முடிவை கைவிடும் வரை தொடர்ந்து போராட்டங்களை நடத்துவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story