தாளவாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்; குடிநீர் சீராக வழங்கக்கோரி நடந்தது


தாளவாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்; குடிநீர் சீராக வழங்கக்கோரி நடந்தது
x
தினத்தந்தி 7 Aug 2019 4:15 AM IST (Updated: 6 Aug 2019 9:49 PM IST)
t-max-icont-min-icon

குடிநீர் சீராக வழங்கக்கோரி தாளவாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தாளவாடி,

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள கும்டாபுரம் பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலிக்குடங்களுடன் தாளவாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு நேற்று காலை 11 மணி அளவில் வந்தனர். பின்னர் அவர்கள் குடிநீர் சீராக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும் அலுவலகம் முன்பு பெண்கள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களும் எழுப்பினார்கள்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் தாளவாடி போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் அங்கு சென்று, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது பொதுமக்கள் கூறுகையில், ‘கும்டாபுரம் கிராமத்தில் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. கடந்த 2 மாதமாக இப்பகுதியில் முறையான குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் நாங்கள் பெரிதும் சிரமப்பட்டு வந்தோம். மேலும் குடிநீருக்காக சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தோட்டங்களுக்கு சென்று தண்ணீர் பிடித்து வந்து பயன்படுத்தி வந்தோம்.

இதனால் எங்களின் அன்றாட தொழில்கள் பாதிக்கப்படுகிறது. எனவே கும்டாபுரம் பகுதிக்கு குடிநீர் சீராக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். அதற்கு வட்டார வளர்ச்சி அதிகாரிகள், கும்டாபுரம் கிராமத்துக்கு குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் பகல் 12 மணி அளவில் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story