இலங்கை சிறையில் உள்ள 7 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் மனு


இலங்கை சிறையில் உள்ள 7 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 6 Aug 2019 11:15 PM GMT (Updated: 6 Aug 2019 5:09 PM GMT)

இலங்கை சிறையில் உள்ள 7 ராமேசுவரம் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி, அவர்களின் குடும்பத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை சேர்ந்த துரைசிங்கம் என்பவரின் படகில் 7 மீனவர்கள் ராமேசுவரம் துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க சென்றனர். டீசல் காலியாகி திரும்ப முடியாமல் படகில் தவித்து கொண்டிருந்தபோது இலங்கை கடற்படைஅவர்களை பிடித்து சென்றது. இந்த படகில் இருந்த பெனிட்டோ, இன்னாசி, முனியசாமி, ஜோசப் பால்ராஜ், சுப்பிரமணி, சத்தியசீலன், நாகராஜன் ஆகிய 7 பேரும் கைது செய்யப்பட்டு மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதைதொடர்ந்து இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை உடனடியாக மீட்டு கொண்டுவர வேண்டும் என்று மீனவர்களின் குடும்பத்தினர் தமிழ்நாடு மீனவர் உரிமை பாதுகாப்பு இயக்க தலைவர் திருமுருகன் தலைமையில் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்து மனு கொடுத்தனர். மேலும் 7 மீனவர்களை உடனடியாக மீட்டு கொண்டு வர மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க வேண்டினர்.

இந்தநிலையில் மாநில அரசின் வேண்டுகோளின்படி மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையின் பயனாக 7 மீனவர்களையும் விடுதலை செய்ய இலங்கை அரசு மன்னார் நீதிமன்றத்திற்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், விரைவில் 7 மீனவர்களும் விடுதலையாகி சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Next Story