தஞ்சை-திருச்சி இடையே ரத்து செய்யப்பட்ட மயிலாடுதுறை-நெல்லை ரெயில் 28 மாதங்களுக்கு பிறகு மீண்டும் இயக்கம்


தஞ்சை-திருச்சி இடையே ரத்து செய்யப்பட்ட மயிலாடுதுறை-நெல்லை ரெயில் 28 மாதங்களுக்கு பிறகு மீண்டும் இயக்கம்
x
தினத்தந்தி 6 Aug 2019 11:00 PM GMT (Updated: 6 Aug 2019 5:57 PM GMT)

தஞ்சை-திருச்சி இடையே ரத்து செய்யப்பட்ட மயிலாடுதுறை- நெல்லை ரெயில் 28 மாதங்களுக்கு பிறகு மீண்டும் இயக்கப்பட்டுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கும்பகோணம்,

மயிலாடுதுறையில் இருந்து நெல்லைக்கு தினசரி பயணிகள் ரெயில் தஞ்சை-திருச்சி வழியாக இயக்கப்பட்டு வந்தது. இந்த ரெயில் காலை 11.25 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து புறப்பட்டு இரவு 11.30 மணிக்கு நெல்லையை சென்றடையும். மறுமார்க்கத்தில் காலை 5.30 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு மாலை 5.15 மணிக்கு மயிலாடுதுறையை வந்தடையும். ஏராளமான பயணிகள் இந்த ரெயிலால் பயன் அடைந்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 6-ந் தேதி முதல் மயிலாடுதுறை-நெல்லை ரெயில் தஞ்சை-திருச்சி இடையேயான வழித்தடத்தில் மட்டும் ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக மயிலாடுதுறையில் இருந்து தஞ்சை வரை ஒரு ரெயிலும், திருச்சியில் இருந்து நெல்லைக்கு மற்றொரு ரெயிலும் இயக்கப்பட்டது.

இதனால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாயினர். இதே தஞ்சை-திருச்சி வழித்தடத்தில் சோழன், ஜனசதாப்தி உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வரும் நிலையில் மயிலாடுதுறை-நெல்லை பயணிகள் ரெயில் மட்டும் இந்த வழித்தடத்தில் ரத்து செய்யப்பட்டது, பயணிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

ரெயிலை தஞ்சை-திருச்சி இடையே இயக்க வேண்டும் என பயணிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதுதொடர்பாக கடந்த மாதம் (ஜூலை) 30-ந் தேதி திருச்சியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின்போது தஞ்சை மாவட்ட ரெயில் உபயோகிப்பாளர் சங்கத்தினர் சார்பில் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இதையடுத்து பயணிகளின் கோரிக்கையை ஏற்று மயிலாடுதுறை - நெல்லை ரெயில் நேற்று முதல் தஞ்சை-திருச்சி வழித்தடத்தில் மீண்டும் இயக்கப்பட்டது. 28 மாதங் களுக்கு பிறகு ரெயில் இயக்கப்பட்டுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து தஞ்சை மாவட்ட ரெயில் உபயோகிப்பாளர் சங்க துணை தலைவர் கிரி, பாபநாசம் ரெயில் உபயோகிப்பாளர் சங்க செயலாளர் சரவணன் ஆகியோர் கூறியதாவது:-

பராமரிப்பு பணிகளை காரணம் காட்டி மயிலாடுதுறை-நெல்லை ரெயிலை கடந்த 28 மாதங்களாக தஞ்சை-திருச்சி வழித்தடத்தில் ரத்து செய்து விட்டனர். இதனால் தென்மாவட்டங்களுக்கு பகல் நேரத்தில் செல்ல முடியாமல் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதுதொடர்பாக ரெயில்வே அதிகாரிகளிடம் தொடர்ந்து முறையிட்டு வந்த நிலையில் ரெயிலை மீண்டும் இயக்கி உள்ளனர். இந்த ரெயிலை எக்காரணம் கொண்டும் மீண்டும் ரத்து செய்யக்கூடாது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story